டெல்லியில் மாடுகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீக்கியர்கள் நூற்றுக் கணக்கான பசுக்களை சாலையில் ஓட்டி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், "மாடுகளுடன் டெல்லி முற்றுகை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் டெல்லிக்கு கொண்டுவந்து முற்றுகையிட்டதாக வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நீண்ட தேடுதலுக்குப் பிறகு எக்ஸ் தளம் (ட்விட்டர்), இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. அந்தப் பதிவுகளை ஒவ்வொன்றாகப் பார்த்தோம். அப்போது 2022ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் இதே வீடியோவை ஒருவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இதே வீடியோவை 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் baba_pala_singh_ji_gawuan_wale என்ற ஐடி கொண்டவர் பதிவேற்றம் செய்திருந்ததும் தெரிந்தது. சில கமெண்ட்களை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது, Divine soul Dhan Dhan Baba Pala Singh Ji என்று இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

அதே நேரத்தில் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவில், "நிஹாங் பாபா பாலா சிங் ஜி, "கயான் வாலா பாபா" என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். 6000க்கும் மேற்பட்ட தெரு மாடுகளைப் பராமரித்து வந்தனர். அவர் நிஹாங் சிங்கின் தர்னா தள பிரிவைச் சேர்ந்தவர். பாபா ஜி 2018 இல் காலமானார், ஆனால் அவரது பிரிவைச் சேர்ந்த நிஹாங்ஸ் இன்னும் 6000 பசுக்களை அமிர்தசரஸ் அருகே உள்ள பாபா பகாலா சாஹிப்பில் பராமரித்து வருகின்றனர்" என்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்!

Archive

டெல்லியில் பசு மாடுகளுடன் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று பகிரப்பட்ட வீடியோ 2021ம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சீக்கியர்களில் ஒரு பிரிவினர் பசுக்களை பராமரித்து வரும் வீடியோ இது என்று சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இதற்கும் 2024 டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

முடிவு:

பஞ்சாபில் சீக்கியர்களில் ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தின் வீடியோவை டெல்லியில் விவசாயிகள் பசுக்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘மாடுகளுடன் டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False