போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த இஸ்ரேலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal False சர்வதேசம் | International

ஈரான் உடனான போருக்கு எதிராக இஸ்ரேல் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோ மீது இஸ்ரேல் மக்கள் ஆர்ப்பாட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tel Aviv மற்றும் Jerusalem உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் அரசின் கொள்கைகள் மற்றும் போர் நிலைமையை எதிர்த்து கோஷமிட்டு போராட்டம் நடத்துகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. மேலும் தகவல்கள் விரைவில்… ⚠️ எச்சரிக்கை: நுணுக்கமான (Sensitive) உள்ளடக்கம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஈரானுக்கு எதிராக போர் புரிந்துவரும் இஸ்ரேலை, அந்த நாட்டு மக்களே கண்டிப்பதாகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வீடியோவாவது உண்மையாக இருக்குமா அல்லது இதுவும் வதந்தியா என்பதை அறிய ஆய்வு செய்து பார்த்தோம். 

Archive

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2026 ஜனவரியில் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்ததைக் கண்டோம். அதுவும் இந்த சம்பவம் ஈரான் நாட்டில் ஜனவரி 8ம் தேதி நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியது பிப்ரவரி 28, 2026. அதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடந்ததாக அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

ஈரான் அரசுக்கு எதிராக போராடிய மக்களை பாதுகாப்புப் படையினர் தடுத்த நிறுத்தியுள்ளனர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பலரும் காயம் அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஈரானின் மஷ்ஹத் (Mashhad) என்ற இடத்தில் ஜனவரி 8ம் தேதி இந்த சம்பவம் நடந்தது என்று அதில் பதிவு செய்திருந்தனர். 

Archive

இதன் அடிப்படையில் தேடிய போது ஈரான் அரசுக்கு எதிராக மஷ்ஹத் பகுதியில் டிசம்பர் 26, 2025ல் இருந்து ஜனவரி 14, 2026 வரை போராட்டம் நடந்ததாகச் செய்திகள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் இந்த வீடியோ இஸ்ரேலில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஈரானுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்து இஸ்ரேலில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த இஸ்ரேலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply