
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் பாஜக முன்னாள் எம்.பி-யும் நடிகையுமான நவ்நீத் கவுர் ராணா கண்ணீர் விட்டு அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாஜக சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நவ்நீத் கவுர் ரவி ராணா பிரசாரம் செய்த வீடியோ மற்றும் அழும் வீடியோக்கள் ஒன்று சேர்த்து ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “ஜெய் ஸ்ரீஇராம் சொன்னால் தான் நாட்டில் இருக்க முடியும் என தேர்தல் பிரச்சாரத்தில் ஆணவமாக சொல்லுச்சு , தேர்தல் முடிவுல சங்கி அழுவதை பாருங்கள்…!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
உண்மை அறிவோம்:
நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் நடிகை நவ்நீத் கவுர் ரவி ராணா. ஜெய் ஶ்ரீராம் என்று கூறாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தில் இவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் 19,731 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அவர் தோல்வி காரணமாக அழுதார் என்று பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ உண்மைதானா என்று அறிய இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை நியூஸ் 18 ஊடகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யூடியூபில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. நியூஸ் 18 2022 மே 5ம் தேதி வெளியிட்டிருந்த வீடியோவில், சிறையில் இருந்து வெளியே வந்த நவ்நீத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வேறு ஒரு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த தன் கணவரும் எம்.எல்.ஏ-வுமான ரவி ராணாவைக் கண்டு கண் கலங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2022ம் ஆண்டு மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்த போது அவரது வீட்டுக்கு முன்பாக அனுமான் பாடலை பாட நவ்நீத் முயன்றுள்ளார். தங்கள் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக சிவசேனோ அளித்த புகார் அடிப்படையில் நவ்நீத் மற்றும் அவரது கணவரை மும்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்றும், சிறையில் இருந்து ஜாமீன் கிடைத்ததும் அவர்கள் இருவரும் வெளியே வந்தனர் என்றும் செய்திகள் கிடைத்தன.
நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2022ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தோல்வி காரணமாக பாஜக முன்னாள் எம்.பி நவ்நீத் அழுதார் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2022ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த போது தன் கணவரைக் கண்டு முன்னாள் எம்.பி நவ்நீத் ரவி ராணா அழுத வீடியோ, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி காரணமாக அழுதார் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தோல்வியால் அழுத பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
