அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற கூட்டமா இது?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவையொட்டி கூடிய கூட்டம் எனக் கூறி பழைய புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. 

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

G P Sai Kumar என்பவர் பகிர்ந்திருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், காவி கொடியோடு ஊர்வலம் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், “இன்று அயோத்தியில் கூடிய கூட்டம்… கொரோனா பரவலுக்கு ஊரடங்குக்கு முன்பு தில்லியில் கூடிய தப்லீக் ஜமாத் தான் காரணம் என்று சொன்ன எருமைகளுக்கு பிறந்த பன்றி பயல்கள் வரிசையில் வரவும்…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை நக்kal Naiyaண்டி Lolள்ளு என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை எல்லா ஊடகங்களும் நேரடி ஒளிபரப்பு செய்தன. பொது மக்கள் அயோத்திக்கு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய கூட்டம் எப்படி வந்தது என்பது ஆச்சரியத்தை அளித்தது. எனவே, இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இது 2018ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த ராமநவமி பேரணியின் போது எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்தது. இது தொடர்பான வீடியோக்களும் கிடைத்தன. வீடியோ காட்சி பார்க்க தெளிவாக இருந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ள காட்சியை காண முடிந்தது. 

இந்த வீடியோவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து, பகிர்ந்திருப்பதாக, தெரியவருகிறது. முழுமையாக வெளியிட்டால் கடையின் பெயர் பலகை எல்லாம் தெரிந்துவிடும் என்பதால் ஸ்கிரீன்ஷாட்டின் சில பகுதியை மட்டும் கட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. வலது பக்கத்தில் போலீசார் நிற்பது, வெள்ளை நிற பந்தல், கூட்டம் என வீடியோவில் அந்த காட்சி முழுமையாக இருந்தது. அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, சாலை ஓரத்தில் உள்ள கடைகளின் பெயர் பலகைகள் கன்னடத்தில் எழுதப்பட்டு இருந்தன. 

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தில் இருந்த போலீசார் நிற்கும் இடத்துக்கு அருகே மஞ்சள் நிற தண்ணீர் தொட்டி, அதன் மேல் பகுதியில் பச்சை நிறத்தில் உருது மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகை எல்லாம் அப்படியே வீடியோ காட்சியோடு பொருந்துவதைக் காண முடிந்தது.  இதன் மூலம் கர்நாடகாவில் 2018ம் ஆண்டு நடந்த ராமநவமி ஊர்வல காட்சிதான் என்பது உறுதியானது.

இதே புகைப்படத்தை வைத்து ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று அறிய, ராமநவமி, குல்பர்கி உள்ளிட்ட கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினோம்.

அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணி என்று இதே வீடியோவை சில மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பரப்பியதும் தெரியவந்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவில், ஆய்வு செய்து வெளியிட்டதும் தெரிந்தது.

நம்முடைய ஆய்வில், பழைய வீடியோ ஒன்றில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து, ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி அயோத்தியில் கூடிய கூட்டம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற கூட்டமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False