திமுக ஆட்சியில் இன்று சென்னை அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டது என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கோவில் ஒன்று இடிக்கப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், "விடியல் ஆட்சியில் இந்துக்களின் இருண்ட காலம். முடிச்சூர் வரதராஜபுரம் செ 48 அமைந்துள்ள ஶ்ரீ நரசிம்ம ஆஞ்சநேயர் ஆலயம் இன்று இடித்து தூளாக்கி விட்டார்கள் ஜெய் ஶ்ரீராம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "விடியல் ஆட்சியில் இந்துக்களின் இருண்ட காலம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனதருமை சொந்தங்களே" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அரசு நிலங்களில் உள்ள வழிபாட்டுத்தளங்கள் அவ்வப்போது இடிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை அருகே முடிச்சூரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதை வைத்து குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. அரசு நிலத்தை, நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டிடங்கள் இடிக்கப்படுவது வழக்கம்தான்.

வழிபாடு நடத்தக்கூடாது என்று எல்லாம் இடிக்கப்படுவது இல்லை. குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருக்கும் போது அகமதாபாத் நகரில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டது. இந்த இடிப்பு விவகாரத்துக்குள் நாம் செல்லவில்லை.

உண்மைப் பதிவைக் காண: kathir.news I Archive

இன்று முடிச்சூர் வரதராஜ புரத்தில் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ பற்றி மட்டும் ஆய்வு செய்தோம். வரதராஜபுரம், ஆஞ்சநேயர், கோவில் இடிப்பு என்று இந்த விவகாரம் தொடர்புடைய சில அடிப்படை வார்த்தைகளைக் கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, 2022ம் ஆண்டு கோவில் இடிக்கப்பட்டது தொடர்பான தகவல் நமக்குக் கிடைத்தது.

வலதுசாரி ஆதரவு ஊடகமான கதிர் செய்திகளில் 2022 ஜனவரி 14ம் தேதி கோவில் இடிப்பு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் கூட நீர் நிலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது என்று நோட்டீஸ் வழங்கி கோவிலை உடைத்தனர். கோவில் சிலைகளை எல்லாம் கோவில் அறங்காவலர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: etvbharat.com I Archive 1 I thehindu.com I Archive 2

அந்த இடம் ஆக்கிரமிப்போ, நீர் நிலையோ இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தடுத்திருக்கலாம். மற்றொரு செய்தியில் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கோவில் இடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்து வெளியிட்டிருந்த செய்தியில், 2015 வெள்ளத்தின் போது பாதிப்பு ஏற்பட்ட போது நீர் நிலை ஆக்கிரமிப்பு அடையாளம் காணப்பட்டது. அப்போதே இந்த கோவில் இடிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதே இடத்தில் கோவில் எழுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கூறுகையில், "நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டப்பட்டுள்ளது என்று அடையாளம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனுமன் ஜெயந்தி வரை அவகாசம் கேட்டார்கள். அவர்களுக்கும் அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது" என்று கூறியதாக இந்து ஆங்கிலம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கோவில் திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது உண்மைதான். நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி 2015ம் ஆண்டிலேயே அப்போது இருந்த ஆட்சியாளர்களால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது செய்திகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இறுதியாக, நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 2022ம் ஆண்டு ஜனவரியில் கோவில் முழுவதும் இடிக்கப்பட்டதாக, செய்திகள் கூறுகின்றன. இதை மறைத்து 2024 நாடாளுமன்ற நேரத்தில் தற்போதுதான் இடிக்கப்பட்டது போன்று வதந்தி பரப்பியுள்ளது தெளிவாகிறது.

முடிவு:

2022ல் இடிக்கப்பட்ட சென்னை அருகே உள்ள முடிச்சூர் ஆஞ்சநேயர் கோவில் வீடியோவை தற்போது தேர்தல் நேரத்தில் இடிக்கப்பட்டது என்று விஷமத்துடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘தேர்தல் நேரத்தில் ஆஞ்சநேயர் கோவிலை இடித்த திமுக அரசு’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Misleading