
மேக வெடிப்பு ஏற்பட்டபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தெரு ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சி போன்று வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “மேகவெடிப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “துளித்துளியாய பரந்து பொழியும் மழைநீர் ஒன்றுதிரண்டு ஒரே இடத்தில் குவிந்து பொழிந்தால்….மேகவெடிப்பு…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேக வெடிப்பு ஏற்பட்டு அருவி போன்று மழை நீர் திடீரென்று கொட்டுவது போன்று வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக அதிகப்படியான மழை பொழிவதை மேக வெடிப்பு என்பார்கள். அதாவது அரை மணி நேரத்தில் 5 அல்லது 10 செ.மீ அல்லது அதற்கும் மேல் மழை பொழிவதை மேக வெடிப்பு என்பார்கள். இப்படி மேகத்தை கிழித்துக்கொண்டு அருவி போன்று தண்ணீர் கொட்டுமா என்று தெரியவில்லை.
இந்த வீடியோவும் பார்க்க உண்மையானது போல இல்லை. அவ்வளவு தண்ணீர் மேலே இருந்து கொட்டுகிறது. ஆனால், தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மோட்டார் வாகனங்களில் சிறு அசைவு கூட இல்லை. இவ்வளவு தண்ணீர் கொட்டியிருந்தால் மோட்டார் சைக்கிள் எல்லாம் அடித்துக்கொண்டு செல்லப்பட்டிருக்கும். எனவே, இந்த வீடியோ உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

hivemoderation.com என்ற ஏஐ வீடியோக்களை கண்டறிய உதவும் தளத்தில் இந்த வீடியோவை பதிவேற்றி ஆய்வு செய்தோம். தெருவே வெறிச்சோடி இருக்கும் பகுதியை உண்மையானதாக இருக்கும் என்று கணித்த அந்த இணையதளம், தண்ணீர் கொட்டும் பகுதி 99.6 சதவிகிதம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்று உறுதி செய்தது.
இந்த வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 2025 ஆகஸ்ட் 6, 7 தேதிகளுக்குப் பிறகு இதை அதிக அளவில் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. ஆனால், இதை யார் முதலில் வெளியிட்டார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை. எல்லா வீடியோக்களையும் பார்க்கும் போது அதில், இன்ஸ்டாகிராம் ஐடி ஒன்றை வாட்டர்மார்க்-ஆக வைத்திருந்ததை காண முடிந்தது. kandha_odysseys_vines என்று இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
வீடியோவில் குறிப்பிட்ட அந்த kandha_odysseys_vines என்ற இன்ஸ்டாகிராம் ஐடி-யை தேடி எடுத்தோம். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ ஆகஸ்ட் 5, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில், “This is AI-generated + VFX touched fictional content for entertainment purposes only” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு விஎஃப்எக்ஸ் மூலம் சரி செய்யப்பட்ட கற்பனை காட்சி, பொழுதுபோக்குக்காக மட்டும்” என்று இருந்தது.
அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ போன்று பல ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளும் இருந்தன. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேக வெடிப்பின் உண்மை காட்சி என்று பரவும் வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான கட்டுரையை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேகவெடிப்பு என்றால் என்ன?
ஒரு மணி நேரத்திற்குள் 20 கி.மீ. – 30 கி.மீ. சுற்றளவுக்குள் 10 செ.மீ. மழை பெய்வதை, ‘மேகவெடிப்பு‘ நிகழ்வாக இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. இது முக்கியமாக மலைப்பகுதிகளில் நிகழ்கிறது. எனவே இது உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், லடாக், காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இதில், நீரின் ஓட்டம் நீரூற்று போல அல்ல. மாறாக வானத்திலிருந்து ஒரு தொட்டி வெடித்து, தண்ணீர் மிக விரைவாக பெரிய அளவில் நிலத்தில் கொட்டுவது போல இருக்கும்.
முடிவு:
செயற்கை நுண்ணறிவு மூலம் வானத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவது போன்று உருவாக்கப்பட்ட வீடியோவை மேக வெடிப்பின் காட்சி என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“மேகவெடிப்பின் காட்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
