75வது சுதந்திர தினம்: வெளிநாடுகளில் மூவர்ணக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது என்று பரவும் படங்கள் உண்மையா?

இந்தியா சமூக ஊடகம் சர்வதேசம்

பிரான்சின் ஈஃபில் டவர், பிரேசிலின் இயேசு சிலை, கோலாலம்பூர் இரட்டை கோபுரம் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் எல்லா இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய தேசியக் கொடியின் மூவர்ணம் அலங்கரிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் உள்ள ஈஃபில் டவர், கோலாலம்பூர் இரட்டை கோபுரம். பைசா நகர சாய்ந்த கோபுரம் என உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள் எல்லாம் இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் ஒளி விளக்கால் பிரகாசிக்கப்பட்டது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “75-வது இந்திய சுதந்திர தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது பல்வேறு நாடுகளின் சிறந்த நினைவுச்சின்னத்தில் அற்புதமான மூவர்ணக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை அதிசயம் ஆனால் உண்மை என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று உலகம் முழுக்க உள்ள இந்தியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் புர்ஜ் கலிஃபா போன்ற ஒரு சில சுற்றுலா தளங்களில் ஒளி விளக்குகள் மூலம் இந்திய தேசியக் கொடியை ஒளிரவிட்டு இந்தியர்களுக்கு வாழ்த்துகளை கூறுவது நடந்து வருகிறது. 

அந்த வகையில் 75வது சுதந்திர தினம் என்பதால் ஈஃபில் டவர், பிரேசிலின் இயேசுநாதர் சிலை, இத்தாலியின் பைசா நகர சாய்ந்த கோபுரம், ரோமின் கொலோசியம் உள்ளிட்ட உலக அதிசயங்களில் எல்லாம் இந்திய தேசியக் கொடியின் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு 2022 ஆகஸ்ட் 15 பிற்பகல் 3 மணிக்கு பதிவிடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் மலேசியாவில் மாலை 5.30 ஆக இருந்திருக்கும். மேலும் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பகுதிகளில் அப்போது நள்ளிரவைக் கடந்திருக்கும். அதற்குள்ளாக அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஒளிரவைத்திருப்பார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஃபேஸ்புக் பதிவை ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 75வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி பாரீஸ், கோலாலம்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணம் ஒளிரவைக்கப்பட்டதாக செய்தி கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடிய போது, 2017ம் ஆண்டு இந்த புகைப்படங்களை FilterCopy என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருப்பது தெரிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

முக்கியமான நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்களில் இந்திய மூவர்ண நிறம் அலங்கரிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர். எப்படி இருக்கும் பாருங்கள் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம், இந்த படங்கள் உண்மையானது இல்லை என்றே பதிவாளர் தெரிவிக்கிறார். மேலும், ஒவ்வொரு படத்திலும் இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டு அவர்கள் பதிவிட்டிருந்தனர். ஆனால், இது எடிட் செய்யப்பட்ட படம் என்ற பகுதியை மட்டும் அகற்றிவிட்டு ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. 

மேலும் கமெண்ட் பகுதியில் ஒருவர் பிக்பேங்க், புர்ஜ் கலிஃபா உள்ளிட்ட கோபுரங்களில் தேசியக் கொடி ஒளிர்வது பெருமை என்று கமெண்ட் செய்ய, அதற்கு, இந்த புகைப்படங்கள் உண்மையானது இல்லை. இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள நமக்கு பல விஷயங்கள் உள்ளன” என்று FilterCopy பதில் அளித்திருந்தது.

இதன் மூலம் உலக அதிசயங்கள், சுற்றுலா தளங்களில் உள்ள கோபுரங்களில் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய தேசியக் கொடியின் மூவர்ணம் காட்சிப்படுத்தப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உலக அதிசய கட்டிடங்கள், முக்கிய நினைவு சின்னங்கள் எல்லாம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண ஒளி விளக்கால் அலங்கரிக்கப்பட்டன என்று பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:75வது சுதந்திர தினம்: வெளிநாடுகளில் மூவர்ணக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது என்று பரவும் படங்கள் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False