எப்ஸ்டீன் கோப்புகள்: பெண்களுடன் மோடி இருப்பது போன்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Epstein Files) தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோதியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த சூழலில் பல பெண்களுடன் மோடி இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பாக நீண்ட பதிவு ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. “கங்கைகரை தோட்டம் .. கன்னிபெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே…!! மோடி கண்ணன் நடுவினிலே..” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனுடன், பெண்களுடன் மோடி இருப்பது போன்று விதவிதமான படங்கள் ஒன்று சேர்த்து எப்ஸ்டீன் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்காவின் பெரும் பணக்காரராக இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மர்மமான முறையில் அவர் இறந்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான லட்சக்கணக்கான புதிய கோப்புகளை அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ளது.30 லட்சம் பக்கங்கள், 1,80,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) பகிரங்கமாக வெளியிடப்பட்டன.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பல பெண்களுடன் நரேந்திர மோடி இருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்துடன் படங்கள் இருப்பதால், இதுவும் அதில் கிடைத்தது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது. இதில் விமானத்தில் அவர் செல்லும் போது வெளியான ஒரு படத்தை எடிட் செய்து வெளியிட்டிருந்தனர். இதனால், மற்ற படங்களும் போலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

Archive

விமானத்தில் செல்லும் புகைப்படத்தை மட்டும் தனியாக எடுத்து கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். பெண் இல்லாமல் கோப்புகளை மோடி பார்க்கும் உண்மையான புகைப்படத்தை 2021ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை எடிட் செய்திருப்பது தெளிவானது.

அடுத்ததாக, காரில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை ஆய்வு செய்தோம். சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபருடன் மோடி காரில் பயணம் செய்தபோது வெளியான புகைப்படம் போல இது இருந்தது. இந்த புகைப்படத்தை தனியாக எடுத்து கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 

Archive

இந்த புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் 2025 டிசம்பர் 4ம் தேதி பதிவிட்டிருந்தார். தன்னுடைய நண்பரும் ரஷ்ய அதிபருமான புதினை வரவேற்ற போது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். புதின் படத்தை அகற்றிவிட்டு, பெண்ணின் படத்தை அதில் வைத்து எடிட் செய்து பெண்ணுடன் நரேந்திர மோடி இருப்பது போன்று படத்தை உருவாக்கியிருந்தது உறுதியானது.

அடுத்ததாக இளம் பெண் ஒருவரின் கையை நரேந்திர மோடி பிடித்தபடி இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை ஆய்வு செய்தோம். அந்த படத்தை தனியாக எடுத்து கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். வேறு ஒரு பெண்ணிடம் மோடி பேசிய புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரியவந்தது. அந்த பெண் பற்றிய தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. குஜராத் முதலமைச்சராக இருந்த போது மோடியின் உதவியாளராக இருந்ததாக அவரையும் நரேந்திர மோடியையும் இணைத்து கிசுகிசு பாணியில் அந்த பதிவு இருந்தது. 

இதன் மூலம் பெண்களுடன் மோடி இருப்பதாக பகிரப்படும் மூன்று புகைப்படங்களும் போலியானது, எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எப்ஸ்டீன் கோப்புகள் வெளியான நிலையில் பெண்களுடன் பிரதமர் மோடி இருப்பது போன்று பரவும் புகைப்படங்கள் போலியானவை எடிட் செய்யப்பட்டவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

Avatar

Title:எப்ஸ்டீன் கோப்புகள்: பெண்களுடன் மோடி இருப்பது போன்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: Altered

Leave a Reply