
உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் மோடி முதலிடம் பிடித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரதமர் மோடி முதலிடம்! உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் மோடி முதலிடம். தாடி வளர்ப்பு, உடையலங்காரம் உள்ளிட்டவற்றை முன்னிட்டு மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ள இளைஞர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Thair vadai 2.o தயிர் வடை 2.0 என்ற ஃபேஸ்புக் பக்கம் செப்டம்பர் 6, 2021 அன்று பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதே போன்று மற்றொரு ஊடகத்தின் நியூஸ் கார்டும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் உடை மற்றும் அலங்காரத்திற்காக அதிக செலவு செய்யும் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை செப்டம்பர் 7, 2021 அன்று Muthukrishnan Uthaman என்ற ஃபேஸ்புக் ஐடியைக் கொண்ட நபர் பதிவிட்டிருந்தார். இவரைப் போல மேலும் பலர் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டிருந்தனர்.
உண்மை அறிவோம்:
மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க நிறுவனம் உலகத் தலைவர்களுக்கு அவரவர் நாடுகளில் எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்து தரவரிசை படுத்தி வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வு ஒவ்வொரு வாரமும் அந்த அந்த நாட்டு மக்களிடம் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இதில் பல மாதங்களாகவே பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இந்த நிலையில் மார்னிங் கன்சல்ட் உலகத் தலைவர்களின் ஆடை அலங்காரத்தை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் மோடி முதலிடம் பிடித்தார் என்று கூறியதாக வதந்தி பரப்பி வருகின்றனர். முதலில் மார்னிங் கன்சல்ட் எதை ஆய்வு செய்கிறது என்பதை உறுதி செய்வதற்காக அதன் இணையதள பக்கத்தைப் பார்வையிட்டோம். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 13 நாடுகளின் தலைவர்களுக்கு அவரவர் நாட்டில் எத்தனை சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவிக்கின்றார்கள் என்பதை வாரம் தோறும் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிடும் அமைப்பு என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் மார்னிங் கன்சல்ட் ஆடை, அலங்காரத்தை வைத்து மதிப்பீடு செய்கிறது என்ற தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
அடுத்தது ஜூனியர் விகடன் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை அதன் சமூக ஊடக பக்கத்தில் தேடி எடுத்தோம். அதில், “உலக தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடம் “மார்னிங் கன்சல்ட்” என்ற நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் எடுத்த ஆய்வின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் ஜூனியர் விகடன் வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.

அடுத்ததாக கதிர் செய்தி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்ட போது, இது போலியான நியூஸ் கார்டு என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது தெரிந்தது. பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு, அசல் மற்றும் போலியான நியூஸ் கார்டுகளை ஒப்பிட்டு அது வெளியிட்டிருந்தது. இதன் மூலம் அந்த நியூஸ் கார்டும் போலியானது என்று உறுதியானது.
இதன் அடிப்படையில் மார்னிங் கன்ல்சட் என்ற நிறுவனம் பிரதமர் மோடியின் ஆடை, அலங்காரம் அடிப்படையில் முதலிடம் வழங்கியது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உடை மற்றும் அலங்காரத்துக்காக அதிக செலவு செய்யும் தலைவர் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார் என்று பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை மற்றும் தவறானவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஆடை அலங்காரத்தில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார் என்று பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
