பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை காரணமாக மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் பேட்டி ஒரு சிறு பகுதி மட்டும் வெட்டி சினிமா காட்சியுடன் இணைத்து வீடியோ உருவாக்கி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில் ஜோதிமணி, "மிக நிச்சயமாக என் மண், என் மக்கள் யாத்திரை மூலமா மிகப்பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் இருக்கும்" என்று கூறுகிறார். இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்த வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாரதிய ஜனதா கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி. அவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட பயணம் காரணமாக மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று பாஜக-வுக்கு சாதகமாக பேசியது போன்று வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பேசுவது ஜோதிமணிதான்... ஆனால் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் முழுமையான வீடியோவை பதிவிடவில்லை. ஒரு பகுதியை மட்டும் கட் காப்பி செய்தது போல் உள்ளது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது. எனவே, அது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

ஜோதிமணி சமீபத்தில் என் மண், என் மக்கள் பயணம் தொடர்பாக பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். மார்ச் 1, 2024 அன்று ஜோதிமணி பேட்டி என்று ஊடகங்கள் சில தங்கள் சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தன. அதை பார்த்த பொது. "மிக நிச்சயமாக என் மண், என் மக்கள் யாத்திரை மூலமா மிகப்பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் இருக்கும்... பா.ஜ.க நோட்டாவுடன் போட்டிப்போட்டு அதைவிட குறைவான வாக்குகளை வாங்கும்" என்று கூறினார். NewsTamil 24X7 ஊடகம் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவின் 43வது விநாடியில் அந்த பகுதி வருகிறது.

பா.ஜ.க நோட்டாவுடன் போட்டிப்போட்டு அதைவிட குறைவான வாக்குகளை வாங்கும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை நையாண்டியாக ஜோதிமணி விமர்சித்துள்ளார். அவர் கூறியதை முழுமையாக வெளியிடாமல், தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் வைத்து, "மிக நிச்சயமாக என் மண், என் மக்கள் யாத்திரை மூலமா மிகப்பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் இருக்கும்" என்று கூறியதை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் பேட்டி வீடியோவை எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் பாஜக-வுக்கு ஆதரவாக கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பேசினார் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நோட்டாவுடன் போட்டியிட்டு பாஜக தோல்வியடையும் அளவுக்கு என் மண், என் மக்கள் மூலமா மிகப்பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் இருக்கும் என்று ஜோதிமணி எம்.பி கூறியதை எடிட் செய்து, என் மண் என் மக்கள் யாத்திரைக்கு சாதகமாக ஜோதிமணி பேசியது போல் தவறான புரிதலை ஏற்படுத்தம் வகையில் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக ஆதரவாகக் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசியதாக பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered