
தி.மு.க எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கரை அவமரியாதை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தி.மு.க எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கர் புகைப்படத்திற்கு அஞ்சலி செய்வதை தவிர்த்துவிட்டு பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் புகைப்படங்களுக்கு மட்டும் மலர் அஞ்சலி செய்வது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்த திமுக எம்எல்ஏ… முதல்வர் மற்றும் திமுகவினரால் அவமதிக்கப்படும் தலித் சமுதாய மக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அம்பேத்கரை அவமரியாதை செய்த தி.மு.க எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி என்று பலரும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பார்க்கும் போது அம்பேத்கரை தவிர்த்துவிட்டு மற்றவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது போல உள்ளது. ஆனால், அம்பேத்கர் புகைப்படத்துக்கும் மாலை அணிவித்து பூக்கள் போடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே, உண்மை என்ன என்று அறிய ஆய்வு செய்தோம்.
ஐட்ரீம் மூர்த்தியின் சமூக ஊடக பக்கங்களைப் பார்த்த போது, அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை காண முடியவில்லை. அதே நேரத்தில் சென்னை தி.மு.க எக்ஸ் தள பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில், முதலில் அம்பேத்கர் படத்திற்குத்தான் ஐட்ரீம் மூர்த்தி அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பிறகு தான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் புகைப்படங்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகிறார்.
முதலில் அம்பேத்கர் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய காட்சியை அகற்றிவிட்டு, மற்ற தலைவர்களின் புகைப்படங்களுக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவது போன்று வீடியோவை எடிட் செய்துள்ளனர். இதன் மூலம் அம்பேத்கரை இழிவுபடுத்திவிட்டார் என்று தவறான குற்றச்சாட்டை உருவாக்கியிருப்பது தெளிவாகிறது.
முடிவு:
அம்பேத்கரை அவமரியாதை செய்த தி.மு.க எம்.எல்.ஏ என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
