FACT CHECK: புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

கொரோனா வைரஸ் சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

புதிய வகை கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு சற்றுமுன் வந்த தகவல் புதிய வகை.!! கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள்  “மீண்டும் மூடப்படும் ! ” – அதிரடி முடிவு – அன்பில் மகேஷ்” என்று இருந்தது. இந்த பதிவை Sabapathy Palanisamy என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 நவம்பர் 29ம் தேதி பதிவிட்டுள்ளார்.

அசல் பதிவைக் காண: Youtube

அதே போன்று “கொரோனா பரவல் அதிகமானதால் பள்ளிகள் மூடப்படும். புதிய வகை கொரோனா பரவல் பள்ளி கல்லூரிகள் மீண்டும் மூடப்படும். மாணவர்கள் அதிர்ச்சி” என்று புதிய தலைமுறை வெளியிட்டது போன்று ஒரு செய்தி யூடியூபில் பகிரப்பட்டு வருகிறது. இதை EASY TO PASS JOB என்ற யூடியூப் சேனல் 2021 நவம்பர் 27ம் தேதி வெளியிட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

ஓமைக்ரான் என்ற புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தென்னாப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் சிலர் இந்த நியூஸ் கார்டை ஷேர்சாட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிலர் ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளனர். எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ளார். அவர் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க முடியும். உயர் கல்விக்கு பொன்முடி அமைச்சராக உள்ளார். கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அவர்தான் அறிவிக்க வேண்டும். மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் சன் நியூஸ் லோகோ இருந்தாலும், உண்மையில் இது சன் நியூஸ் வெளியிட்டது போல இல்லை. எனவே, சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜிடம் இது குறித்து கேட்டோம். அவர் இது போலியானது. நாங்கள் இதை வெளியிடவில்லை என்றார்.

புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு, புதிய தலைமுறை லோகோவுடன் பரவும் வீடியோ பற்றிக் கேட்டோம். அவரும் இந்த வீடியோ நாங்கள் வெளியிட்டது இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் வீடியோவில் தலைமை நிருபர் சண்முகசுந்தரம் என்று ஒருவர் பேசுகிறார். அப்படி யாரும் இங்கு உள்ளார்களா என்று விசாரித்தபோது, அவர் புதிய தலைமுறையில் இல்லை, சத்யம் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார் என்றார். இதன் மூலம் இந்த வீடியோவும் போலியானது என்று உறுதியானது.

சன் டிவி பெயரில் பரவும் நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த நியூஸ் கார்டை பயன்படுத்தி 2021 அக்டோபரில் ஒரு யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில் பள்ளிகள் மூடப்படாது என்று அமைச்சர் கூறும் காட்சிகள் வருகின்றன. ஆனால், விஷமத்தனமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக தவறான தகவல் வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: dailythanthi.com I Archive

ஓமைக்ரான் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்படும் என்றோ, அது பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது என்றோ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது, பள்ளிகள் மூடப்படும் என்று பரவும் செய்தி தவறானது என்று அன்பில் மகேஷ் அளித்த பேட்டி நமக்கு கிடைத்தது. இதன் மூலம் ஓமைக்ரான் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் செய்தி மற்றும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஓமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False