
பிரதமர் மோடியின் சொகுசு பங்களா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2
ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஜெகன்மோகன் கட்டிய பங்களாவின் வீடியோவை ஃபேஸ்புக், எஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர் ஆனால் நிலைத்தகவலில் ” ஏழைத் தாயின் மகனுக்கு மக்கள் வரிப்பணத்தில் சொகுசு பங்களா தேவையா.? குளியல் அறை மட்டுமே 26 லட்சமாம் 😱
@annamalai_k பதில் சொல்லு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில் ரூ.500 கோடியில் அரசு பங்களாக்கள் கட்டப்பட்டதாக வீடியோவுடன் கூடிய செய்தி வெளியானது. முந்தைய ஆட்சிக் காலத்தில் எப்படி எல்லாம் மக்கள் பணம் வீணாக்கப்பட்டது பாருங்கள் என்பது போன்று புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி இந்த பங்களா வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த கட்டிடம் ஜெகன்மோகனின் சொந்த கட்டிடமில்லை… குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கியத் தலைவர்கள் வந்தால் ஓய்வெடுக்கவும் இந்த கட்டிடம் கட்டப்பட்டது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த இரண்டு கட்சிகளின் மோதல் தொடர்பாக எல்லா ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது.
பாலிமர் வெளியிட்டிருந்த செய்தியில் பிரதமர் உள்ளிட்ட விவிஐபி-க்கள் தங்குவதற்காக என்று குறிப்பிட்ட ஒரு வரியை மட்டும் எடுத்து, பிரதமர் நரேந்திர மோடியே கட்டிய பங்களா போன்று பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எனவே, இந்த சமூக ஊடக பதிவுகள் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
https://twitter.com/polimernews/status/1803313305655652391
பாலிமர் வெளியிட்டிருந்த வீடியோவை அதன் சமூக ஊடக பக்கங்களிலிருந்த எடுத்தோம். எந்த இடத்திலும் பிரதமர் மோடி கட்டியது என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்படவில்லை. அதில் “விசாகப்பட்டினத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் வரிப் பணம் ரூ.500 கோடி செலவில் பங்களாவைக் கட்டியுள்ளதாகத் தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபி-க்கள் வந்தால் தங்குவதற்கான கட்டிடம் அது என்று பதில் அளித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, அரசு கட்டிடத்தை ஜெகன்மோகனுடையது என்று காட்டத் தெலுங்கு தேசம் கட்சி முயல்வதாகக் கூறியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாலிமர் செய்தியின் இந்த முழு வீடியோவை பயன்படுத்தாமல், பாதியை மட்டும் கத்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெரியவந்தது. இந்த கட்டிடத்தை தனக்காக கட்டும்படி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகவோ, நரேந்திர மோடி இந்த பங்களாவைக் கட்டிக்கொண்டதாகவே அந்த செய்தியில் கூறவில்லை.
உண்மை இப்படி இருக்க, ஏழைத் தாயின் மகனுக்கு மக்கள் வரிப் பணத்தில் சொகுசு பங்களா தேவையா என்று அவருடைய சொந்த பங்களா போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தவறான புரிதலை ஏற்படுத்துகிறது… தவறான தகவலை மக்களுக்கு வழங்குகிறது.
நம்முடைய ஆய்வில் இந்த பங்களாவைக் கட்டியது ஆந்திர மாநில அரசு என்பதும், முந்தைய அரசு கட்டிய சொகுசு கட்டிடத்தை புதிய அரசு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிமர் டிவி வெளியிட்ட செய்தி பாதி நீக்கப்பட்டு மீதி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பங்களாவுக்கும் நரேந்திர மோடிக்கும் தொடர்பில்லை என்பதால் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மக்களின் வரிப் பணத்தில் நரேந்திர மோடிக்கு சொகுசு பங்களா கட்டப்பட்டதாக பரவும் வீடியோ ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சியில் கட்டப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘மோடியின் சொகுசு பங்களா’ என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
