கோமதி மாரிமுத்துவின் ஷூ பற்றிய சர்ச்சை!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’கிழிந்த காலணிகளுடன் ஓடினேன்,’’; ‘’என்னிடம் நல்ல ஷூ வாங்கக்கூட வசதியில்லை,‘’; ‘’அதிர்ஷ்டக்கார ஷூ என்பதால் பழைய ஷூவுடனே ஓடினேன், அது 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது,’’ என கோமதி மாரிமுத்து பேட்டி அளித்ததாக, சமூக ஊடகங்களில் மாறி மாறி தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதுதவிர, ஒரு நல்ல ஷூ கூட வாங்கித் தர முடியாத வக்கற்ற தமிழக அரசு, மத்திய அரசுகளை கண்டிக்கிறோம் எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மையை விரிவாக ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

கிழிந்த காலணிகளுடனே ஓடினேன் – தங்க மங்கை கோமதி

#ஒரு இந்தியனா நாம வெட்கப்படவேண்டிய தருணம் 

என்ன…” இதுக்கு தான்டா வசதியில்லாதவர்களை இனி செலக்ட் பண்ணக்கூடாதுனு சம்மந்தப்பட்டவய்ங்க முடிவுக்கு வராம இருக்கனும்

Archived Link

Archived Link

Archived Link

இப்படி பலவிதமான பதிவுகள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு தரப்பினர் கோமதிக்கு ஆதரவாகவும், ஒரு தரப்பினர் கோமதிக்கு எதிராகவும் மாறி மாறி பதிவுகளை பகிர்ந்து வருவதால், ஃபேஸ்புக் முழுக்க, கோமதி ஷூ பற்றிய விசயம் டிரெண்டிங்கில் நீடிக்கிறது.

உண்மை அறிவோம்:
தமிழகத்தைச் சேர்ந்தவர் கோமதி மாரிமுத்து. கத்தார் நாட்டின தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று, சாதனை படைத்தார்.

இளங்கலை வணிகவியல் பட்டதாரியான இவர், பெங்களூருவில் வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார். ஆசிய தடகளப் போட்டியில், கோமதி நிகழ்த்திய சாதனையை தொடர்ந்து, அவருக்குப் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. அத்துடன், இவர் ஓட்டப் பந்தயத்தில் நிகழ்த்திய சாதனையைவிட, அந்த போட்டியின்போது இவர் அணிந்து ஓடிய ஷூவைப் பற்றித்தான் பலரும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கேற்ப, கோமதியும், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, கிழிந்த ஷூவுடன்தான் ஓடினேன், என்னிடம் நல்ல ஷூ இல்லை, கையில் காசு இல்லை, அதிர்ஷ்டமான ஷூ என்பதால், 3 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஷூவை பயன்படுத்தினேன், என பலவிதமாக, பேட்டியை அவிழ்த்துவிட, பல தரப்பிலும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். ‘’ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு படித்து வளர்ந்த நான், மிகவும் போராடி விளையாட்டுத் துறைக்கு வந்தேன், போட்டியின்போது, நான் அணிந்திருந்தது கிழிந்த ஷூதான். அது அதிர்ஷ்டமான ஒன்று என்பதால், அதை அணிந்திருந்தேன். தமிழகத்திலேயே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். என்னைவிட, எனது சகோதரருக்கு நல்ல வேலை கிடைத்தால், எங்களின் குடும்ப பாரம் குறையும், நான் விளையாட்டில் தீவிரமாகக் கவனம் செலுத்துவேன்,’’ இப்படித்தான் கோமதி எங்கு சென்றாலும் பேட்டி தருகிறார். ஒவ்வொரு இடத்திலும் முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசுவதால், பலரும் அதை உண்மை என நம்பி, மத்திய அரசையும், தமிழக அரசையும் காரசாரமாக விமர்சிக்கின்றனர்.

இந்த விசயத்தில் அரசியல் பூச்சு வேறு கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கோமதியின் ஊடக பேட்டி பற்றியும், அதுதொடர்பான சில செய்தி ஆதாரங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

இதில், குறிப்பாக, தந்தி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘’அது என்னுடைய லக்கி ஷூ, கிழிந்திருந்தாலும் பரவாயில்லை என நானே விரும்பி அணிந்துகொண்டேன். யாரும் அதை அணியும்படி கட்டாயப்படுத்தவில்லை. அது வேறு வேறு கலரில் இருந்தாலும், அது ஒரே ஜோடியை சேர்ந்ததுதான். அந்த மாடலே அப்படித்தான். அது லேசாக மட்டுமே கிழிந்திருந்தது,’’ என்று கோமதி மாரிமுத்து குறிப்பிடுகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, அவரை ஆதரித்தும், மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அத்தனை பதிவுகளும் தவறானவை என உறுதியாகிறது.

உண்மை புரியாமலேயே, பலரும் பலவித கட்டுரைகளை, இந்த விசயத்தில் எழுதுகின்றனர். இதே சூழலில், கோமதி மாரிமுத்துவிற்கு தரும் முக்கியத்துவத்தை, நவீன், சித்ரா போன்ற சக விளையாட்டு வீரர்களுக்கு யாரும் தருவதில்லை. கோமதி மாரிமுத்து ஒரு தலித் கிறிஸ்தவர், அவர் பின்னணியில், பாதிரியார் ஜெகத் கஸ்பார் இருக்கிறார் என்றும், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன், திமுக சார்பாக, கோமதிக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கியதால், அஇஅதிமுக, பாஜக.,வினர் உடனே, கோமதியை திட்ட தொடங்கிவிட்டனர்.

அதேபோல, கோமதியின் ஷூ மாடல் இதுதான், அதுதான் என்றும் பலர் பூமா, அடிடாஸ் மாடல்களை காட்டி பதிவிடுகிறார்கள். இது எல்லாமே முன்னுக்குப் பின் முரணான தகவல்களாக உள்ளன. ஏற்கனவே, இதுபற்றி நாம் ஒரு உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளோம்.

இதுவரை நடத்திய ஆய்வில் தெரியவந்த உண்மையின் விவரம்,

1) கோமதி மாரிமுத்து கஷ்டப்பட்டு உழைத்து, பதக்கம் வென்றிருக்கிறார். அதற்காக, அவரது தாய், தந்தை, நண்பர்கள் எனப் பலரும் உதவியிருக்கிறார்கள். எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்,பல தடைகளை கடந்து, ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்.
2) ராசியான ஷூ என்பதால், சிறிது கிழிந்திருந்தபோதிலும், அதையே ஆசைப்பட்டு அணிந்து ஓடியிருக்கிறார்.
3) அவரை அப்படி கிழிந்த ஷூவுடன் ஓடும்படி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
4) நாடு திரும்பிய கோமதிக்கு, பலரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளதோடு, பரிசுகளையும் வழங்கிவருகின்றனர்.
5) கோமதியை ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்து, அனுப்பி வைத்தது AFI எனப்படும் Athletic Federation of India அமைப்பாகும். கோமதி தனிப்பட்ட முறையில் ரிஸ்க் எடுத்து, இந்த போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். எனவே, இதில், மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடி தொடர்பில்லை.
6) சரியான உடை, சரியான ஷூ எதுவும் அணியாமல், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. அதற்கென தனித்தனி விதிமுறைகள் உள்ளன.
7) விலை குறைவான ஷூ, உடையை கோமதி அணிந்திருந்திருக்கிறார். இது அவருக்கு சற்று மனக்கவலை அளித்துள்ளது.
8) அவர் அணிந்திருந்த ஷூவின் மாடலே அப்படிப்பட்ட ஒன்றுதான். அதற்காக, யாரோ கீழே வீசியெறிந்த ஷூவை கோமதி அணிந்து ஓடினார் எனக்கூறுவது மிகவும் தவறு.
 
இவ்வளவுதான் இந்த விசயத்தில் உண்மை.

மற்றவை எல்லாமே அவரவர் பார்வையில் கருத்து சொல்கிறேன் பேர்வழி என கிளப்பிவிடும் பரபரப்புகள்தான். அத்துடன், கோமதி மாரிமுத்துவின் ஷூ பற்றி பரவும் தகவல்களில் பெரும்பாலானவை, திமுக, பாஜக, நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவைச் சேர்ந்தவர்கள், பகிர்பவையாக உள்ளன. இதனால், இந்த விசயத்தில் வெறும் விளையாட்டு என்ற நிலை மாறி, அரசியல் கலந்துவிட்டதாக, முடிவு செய்யப்படுகிறது. எனவே, இப்படியான உறுதி செய்யப்படாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.   

முடிவு:
கோமதி மாரிமுத்துவின் ஷூ பற்றி தெரிவிக்கப்படும் கருத்துகள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவுகளில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:கோமதி மாரிமுத்துவின் ஷூ பற்றிய சர்ச்சை!

Fact Check By: Parthiban S 

Result: Mixture