சுறா மீன் கப்பலை தாக்கும் காட்சி என்று பரவும் கிராஃபிக்ஸ் வீடியோ!

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International தொழில்நுட்பம்

ராட்சத மீன் ஒன்று கப்பலை தாக்கி அழிக்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

கிராஃபிக்ஸ் வீடியோ போல் உள்ளது. அதில் சுறா மற்றும் திமிங்கிலம் என இரண்டும் கலந்த கலவை போல் உள்ள மீன் ஒன்று கப்பலை தாக்கி இரண்டாக உடைக்கிறது. இந்த காட்சியை ஒளிப்பதிவு செய்த ஹெலிகாப்டரையும் தாக்கி கடலுக்குள் வீழ்த்துகிறது.

நிலைத் தகவலில், “சுறா மீன் கப்பலை தாக்கும் வீடியோ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் fishermans_life_style_vijay என்ற ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 18ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இதை ஃபேஸ்புக்கில் யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். Kulanthai Kulanthaivel என்ற ஐடி கொண்டவர் இந்த வீடியோவை 2023 ஏப்ரல் 19ம் தேதி பதிவிட்டிருந்தார். நிலைத் தகவலில், “ராட்சத மீன் கப்பல் தாக்குதல் காட்சி கனடாவில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களைப் போலப் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கனடாவில் ராட்சத மீன் ஒன்று கப்பலைத் தாக்கியது என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால் காட்சியைப் பார்க்கும் போது ஏதோ திரைப்பட காட்சி போல இருந்தது. ஏதாவது ஆங்கில படத்தில் வந்த காட்சியை எடிட் செய்து உண்மை சம்பவம் போல் பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த பதிவை ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை Aleksey__n @AlekseyN11 என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 10ம் தேதி பதிவிட்டிருப்பது தெரிந்தது. வீடியோ பற்றிய குறிப்பு பகுதியில், “I’m finally done! #megalodon #meg #animation #digitalart #CGI #3D” என்று இருந்தது. அனிமேஷன், 3டி என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இது உண்மையான வீடியோ இல்லை என்பது தெரிந்தது. வீடியோவை பதிவிட்டவரின் சுய விவர குறிப்பைப் பார்த்தோம். அதில் அவர் தன்னை அனிமேஷன் வீடியோ கலைஞர் என்று குறிப்பிட்டிருந்தார்.

நம்முடைய தேடலில் இந்த வீடியோ பற்றி அமெரிக்க ஊடகத்தில் செய்தி வெளியாகி இருப்பதையும் காண முடிந்தது. அதில், அனிமேஷன் வீடியோ வைரலாகி வருகிறது. 2.5 மில்லியன்  பெரிய பற்கள் கொண்ட சுறா எனப்படும் மெகலோடன் சுறா (The megalodon shark)எப்படி கப்பலைத் தாக்கி அழிக்கிறது என்று தயாரிக்கப்பட்ட அனிமேஷன் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வகை சுறா 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இந்த சுறா மீன் அனிமேஷனை 3டி கலைஞர் உருவாக்கியுள்ளார்” என்பது போல் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: the-sun.com I Archive

இவை எல்லாம் இந்த வீடியோ உண்மையில் நிகழ்ந்த சம்பவத்தின் பதிவு இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கனடாவில் மிகப்பெரிய கப்பலை ஒரு சில நிமிடங்களில் சுறா மீன் ஒன்று தாக்கி அழித்தது என்று பரவும் வீடியோ உண்மையானது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

3டி கிராபிக்ஸ் கலைஞர் உருவாக்கிய சுறா மீன் வீடியோவை எடுத்து, கனடாவில் உண்மையில் சுறா மீன் கப்பலை தாக்கி அழித்தது என்று சமூக ஊடகங்களில் சிலர் தவறாக பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சுறா மீன் கப்பலை தாக்கும் காட்சி என்று பரவும் கிராஃபிக்ஸ் வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False