இஸ்ரேலின் ஹெலிகாப்டரை ஹமாஸ் அமைப்பினர் சுட்டு வீழ்த்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

இரண்டு ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஹமாஸ் முழு ஆயத்துடனேயே போரை ஆரம்பித்துள்ளது. இது இஸ்ரேலிய விமானம் சூட்டு வீழ்த்தும் காட்சி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Vidiyal என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 அக்டோபர் 7ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் அப்பாவி பொது மக்கள் ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேலின் விமானத்தை ஹமாஸ் அமைப்பினர் வீழ்த்தினர் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்க்கும் போது நிஜ வீடியோ போல் இல்லை. வீடியோகேம் காட்சி போல உள்ளது. எனவே, இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல சில நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் இது உண்மையான வீடியோ அல்ல, simulation செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ அக்டோபர் 4. 2023 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7ம் தேதிதான் முதல் தாக்குதலைத் தொடங்கியது. தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் இது இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலுடன் தொடர்புடைய வீடியோ இல்லை என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கம்ப்யூட்டர் கேம் அனிமேஷன் வீடியோவை இஸ்ரேல் ஹெலிகாப்டரை ஹமாஸ் அமைப்பு வீழ்த்திய காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இஸ்ரேல் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஹமாஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False