முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பற்றி பகிரப்படும் போலிச் செய்தி

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’குஷ்பு, நமீதாவை மொழிப் போர் தியாகிகள் என்று சொன்ன அண்ணாமலை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

அக்டோபர் 12, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பற்றி தினமலர் ஊடகத்தின் பெயரில் வெளியான செய்தியைப் போன்ற நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’குஷ்பு, நமீதா போன்ற மொழிப் போர் தியாகிகள் பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி – அண்ணாமலை,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். நமது வாசகர்கள் சிலர் இதுபற்றி வாட்ஸ்ஆப் (+91 9049053770) எண்ணில் நம்மை தொடர்பு கொண்டும் சந்தேகம் கேட்டிருந்தனர்.

உண்மை அறிவோம்:
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, அங்கிருந்து வெளியேறி, கடந்த அக்டோபர் 12, 2020 அன்று பாஜகவில் இணைந்தார். இதையொட்டி, வித விதமான விமர்சனங்கள், வதந்திகள் அவரை மையமாக வைத்து பகிரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் மேற்கண்ட வதந்தியும்.

இதுபற்றி நாம் முதலில் தினமலர் ஊடகம் எங்கேனும் இப்படி செய்தி வெளியிட்டுள்ளதா, அல்லது அண்ணாமலை வாய் தவறி இப்படி பேசியுள்ளாரா என தகவல் தேடினோம்.

நீண்ட தேடலுக்குப் பின், தினமலர் வெளியிட்டிருந்த உண்மையான நியூஸ் கார்டை கண்டோம். அந்த ஃபேஸ்புக் பதிவின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

இதன்படி, அக்டோபர் 11, 2020 அன்று அண்ணாமலை பற்றி தினமலர் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது. அதில், ‘’அதிமுக – பாஜ., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. ஒரே நேர்கோட்டில் பயணித்து வருகிறோம் – பாஜ., துணைத் தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனை எடுத்து, சிலர் தங்களது கற்பனைக்கு ஏற்ப, தவறான தகவலை சேர்த்து, எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது. 

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் அண்ணாமலை தரப்பினரை தொடர்கொள்ள தீர்மானித்தோம்.

இதன்படி, நமது நண்பர் உதவியுடன் பாஜக மாநில ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். தகவலை பார்வையிட்ட அவர், ‘’இது போலியான முறையில் உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு. தினமலர் எப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை. அதேபோல, அண்ணாமலையும் இவ்வாறு எதுவும் பேசவில்லை,’’ என்று தெரிவித்தார்.

எனவே, மேற்கண்ட தகவல், எடிட் செய்யப்பட்டு பகிரப்படும் ஒன்றுதான் என சந்தேகமின்றி தெளிவாகிறது. இதுதொடர்பான அசல் மற்றும் போலி நியூஸ் கார்டு இரண்டையும் ஒப்பீடு செய்துள்ளோம். கீழே பார்க்க…

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக, ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பற்றி பகிரப்படும் போலிச் செய்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered