தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archive

அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "தமிழகத்தில் சனாதன ஆட்சி - அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கோவில்களில் ஆடு,கோழி பலியிடும் முறையை தடை செய்வோம். ஆடு, கோழி பலியிடும் முறை சனாதனத்தில் இல்லை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை" என்று இருந்தது. ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் @Ranjan12381263 என்ற எக்ஸ் (ட்விட்டர்) ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 12ம் தேதி இதைப் பதிவிட்டிருந்தார்.

Archive

இதே போன்று தந்தி டிவி வெளியிட்டது போலவும் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.Razor @razorturbokat என்ற எக்ஸ் ஐடி கொண்டவர் இதை பகிர்ந்திருந்தார். இவர்களைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் கிராமிய கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவது வாடிக்கையான விஷயம். அதற்கு வேட்டு வைக்கும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பலரும் நியூஸ் கார்டு ஒன்றைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டுகளைப் பார்க்கும் போது இவை புதிய தலைமுறையோ தந்தி டிவி-யோ வெளியிட்டது போல இல்லை எனவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் தமிழகத்தில் சனாதன ஆட்சியை அமைப்போம், ஆடு, கோழி பலியிடத் தடை விதிப்போம் என அண்ணாமலை கூறினாரா என்று ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்தோம். அண்ணாமலை அப்படி பேசியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அண்ணாமலையின் சமூக ஊடக பக்கங்களிலும் இப்படி எந்த ஒரு கருத்தையும் அவர் பதிவிடவில்லை. எனவே, இந்த தகவல் தவறானது என்பது உறுதியானது.

அடுத்ததாக இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை நிர்வாகி ஒருவருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அடுத்ததாக தந்தி டிவி ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதிலும் கூட ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு எதுவும் இல்லை. இதை உறுதி செய்துகொள்ள தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இதை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக ஆட்சி அமைந்ததும் ஆடு, கோழி பலியிடத் தடை செய்யப்படும் என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False