
பீப் பிரியாணியில் இரண்டு பீஸ் கூடுதலாக கேட்டதற்காக பாய் அடித்ததால் இந்து மக்கள் கட்சியை ஆரம்பித்தேன் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்து மக்கள் கட்சி வெளியிட்டது போன்று ட்வீட் பதிவு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒருநாள் பீப் பிரியாணி ரெண்டு பீஸ் extra கேட்டேன். அந்த பாய் என்ன கோபத்துல இருந்தாரோ தெரியல கரண்டிய எடுத்து கவட்டையில அடிச்சுபுட்டாரு. அன்னைக்கு ஆரம்பிச்சதுதான் இந்த கட்சி” என்று இருந்தது.
இந்த பதிவை Ahamed Tuti Post என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் போலியாக ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கி, விஷமத்தனமாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த சூழலில் பிரியாணியில் கூடுதலாக மாட்டிறைச்சி துண்டு கேட்டதற்காக பாய் அடித்தார் என்பதால் இந்து மக்கள் கட்சியைத் தொடங்கினேன் என்று அர்ஜூன் சம்பத் கூறியது போன்று ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மையில் இப்படி பதிவு ஒன்றை இந்து மக்கள் கட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். ஆனால், அதில் அப்படி எந்த பதிவும் இல்லை. போலியான இந்து மக்கள் கட்சி ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அதில் இந்த ட்வீட் பதிவு இருந்தது.
உண்மையான இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் ஐடி @Indumakalktchi என்பதாகும். போலியாக தொடங்கப்பட்டுள்ள ட்விட்டர் பக்கத்தின் ஐடி @Indumakalkatchi என்பதாகும். இந்து மக்கள் கட்சியின் உண்மையான ட்விட்டர் பக்கத்தில் கட்சி என்பதை ஆங்கிலத்தில் ktchi என்று குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் போலியான ட்விட்டர் பக்கத்தில் கூடுதலாக ‘ஏ’ சேர்த்து katchiஎன்று பயன்படுத்தியுள்ளனர்.
@Indumakalktchi என்ற ஐடி-யில் இயங்கும் பக்கம்தான், இந்து மக்கள் கட்சியின் உண்மையான ட்விட்டர் பக்கம் என்று அக்கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. யாரோ விஷமத்தனமாக இந்து மக்கள் கட்சி பெயரில் போலியாக உருவாக்கிய ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவை, உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.
நம்முடைய ஆய்வில் பிரியாணி தொடர்பாக பதிவிட்ட ட்விட்டர் பக்கம் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரியாணி பீப் பீஸ் கிடைக்கவில்லை என்பதற்காக கட்சியை ஆரம்பித்தேன் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பகிரப்படும் ட்வீட் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பீப் பிரியாணியில் கூடுதலாக இறைச்சி கேட்டதற்காக பாய் அடித்தார் என்பதால் இந்து மக்கள் கட்சியை ஆரம்பித்தேன் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பிரியாணி பீஸ் கேட்டு அடி வாங்கியதால் கட்சி ஆரம்பித்தேன் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…