ஸ்டாலின் அணிந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ. 17 கோடி என்று பிடிஆர் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ.17 கோடி என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூலிங் ஜாக்கெட் 17 கோடி. துபாய் செல்லும் போது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என நிதியமைச்சர் PTR தகவல்” என்று இருந்தது.

இந்த பதிவை Venkatesh Purushothaman என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பதிவிட்டு, பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

துபாய் செல்லும் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த ஜாக்கெட் விலை ரூ.17 கோடி என்று நிதியமைச்சரே தகவல் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் அதை ஆளுங்கட்சியின் அமைச்சரே சொல்வாரா என்பது கேள்விக்குறிதான்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, உண்மையில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று முதலில் பார்த்தோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை மார்ச் 24, 2022 அன்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்தது. ஆனால் அதில், “தமிழை கொண்டாடும் துபாய். துபாய் எக்ஸ்போவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தயார் நிலையில் துபாய்; முதலமைச்சரை வரவேற்கும் விதமாக தமிழில் ‘நல்வரவு’ என கண்காட்சியில் எழுதப்பட்டுள்ளது” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமப் பிரசாரம் செய்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இதை மேலும் உறுதி செய்ய நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது. விஷமத்தனமானது என்று உறுதியானது.

Archive

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்பாக வெளியாகும் போலி செய்திகளுக்கு, தியாகராஜன் உடனுக்குடன் பதில் அளிப்பது வழக்கமாக உள்ளது. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளாரா என்று பார்த்தோம். அப்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் இந்த தகவலும் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

துபாய் சென்ற போது ஸ்டாலின் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை ரூ.17 கோடி என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஸ்டாலின் அணிந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ. 17 கோடி என்று பிடிஆர் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False