
கும்பமேளாவில் ரூ.4000 கோடி செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறையின் நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வரிசையாகக் கழிப்பறை கோப்பைகள் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. எந்த மறைவும் இன்றி, வரிசையாக இந்த கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “4000 கோடி செலவில் உலகமே வியக்கும் பாத்ரூம் வசதியை கும்பமேளாவில் செய்த எங்கள் பாஜக அரசை நினைத்து உலகமே வியக்கிறது. இந்தி படிச்சு தொலைங்கடா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவையொட்டி ரூ.4000ம் கோடி செலவில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதாக சிலர் சமூக ஊடகங்களில் வீடியோவை பரப்பி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக ரூ.7500 கோடிதான் கும்பமேளா ஏற்பாட்டுக்காக செலவு செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கழிப்பறைக்கு மட்டுமே 4000 கோடி செலவிடப்பட்டதாக தவறாகப் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ பிரயாக்ராஜ் கும்பமேளாவையொட்டி அமைக்கப்பட்ட கழிப்பறையின் காட்சியா என்று அறிய ஆய்வை மேற்கொண்டோம். வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள ஒரு இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக சில பதிவுகள் நமக்கு கிடைத்தன. அதை பார்க்கும் போது, கழிப்பறை கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் போது வீடியோ எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
வங்கமொழியில் வெளியிடப்பட்டிருந்த பதிவை, மொழி பெயர்த்து பார்த்தோம். அதில், மிசானூர் ரஹ்மான் அஸ்ஹரி ஹுஸூர் (Mizanur Rahman Azhari Huzoor) என்ற இஸ்லாமிய சொற்பொழிவாளரின் நிகழ்ச்சி சிட்டகாங் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதையொட்டி ஏற்பாடுகள் நடந்து வருவதாக குறிப்பிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடியபோது, 2024 ஜனவரி இறுதியில் இந்த ஐந்து நாள் நிகழ்ச்சி நடந்ததாக செய்திகள் நமக்குக் கிடைத்தன.
நமக்குக் கிடைத்த யூடியூப் வீடியோவில் சுற்றிலும் உள்ள பல்வேறு கட்டிடங்கள், குடியிருப்பைக் காண முடிந்தது. அதன் அடிப்படையில் இந்த இடம் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ளதா என்பதை அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். இஸ்லாமிய நிகழ்ச்சி நடந்த பரேட் மைதானத்தின் கூகுள் ஸ்ட்ரீட் வியூவை தேடி எடுத்தோம். அதில், அந்த மைதானத்தைச் சுற்றியிருந்த கட்டிடங்களும், கூகுள் ஸ்ட்ரீட் வியூ காட்சியும் ஒத்துப்போயின. இதன் மூலம் இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது தெளிவானது.
முடிவு:
வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடந்த இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியையொட்டி அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த கழிப்பறை தொடர்பான வீடியோவை பிரயாக்ராஜ் கும்பமேளாவில் எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:கும்பமேளாவில் அமைக்கப்பட்ட கழிப்பறை என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
