ரூ.2000 நோட்டில் குறைபாடு இருந்ததால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Tweet Claim Link l Archive

தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "2000 ரூபாய் நோட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதால் எளிதில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தவே 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது - பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டை Dr M K SHARMILA @DrSharmila15 என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 மே 21ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்ந்து வருகின்றனர். காங்கிருப்பு கே ஜி மோகன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இதை 2023 மே 21ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

2000 ரூபாய் நோட்டுக்கள் செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த சூழலில் அது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. 2000 ரூபாய் நோட்டில் குறைபாடு என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி கூறியதாகப் பலரும் சமூக ஊடகங்களில் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நியூஸ் கார்டு பார்க்கத் தந்தி டிவி வெளியிட்டது போலவே உள்ளது. ஆனால், அதன் ஃபாண்டில் லேசாக வித்தியாசத்தைக் காண முடிந்தது. மேலும், உண்மையில் வானதி சீனிவாசன் இப்படி கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். ஆனால், எந்த ஊடகத்திலும் அப்படி ஒரு செய்தியே இல்லை. எனவே, இது போலியானது போல இருந்ததால் ஆய்வு செய்தோம்.

முதலில் ஃபேஸ்புக்கில் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். மே 20, 2023 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டையும் தந்தி டிவி வெளியிடவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை அதன் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

மே 20, 2023 அன்று வானதி சீனிவாசன் பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். ரூபாய் நோட்டு தொடர்பாக அவர் எதையும் கூறியதாக செய்தி இல்லை. கடைசியாக கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அவர் பேட்டி அளித்திருப்பது தெரிந்தது. வானதி சீனிவாசன் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் ஏதும் கருத்து தெரிவித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். அதிலும் எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டில் குறைபாடு இருந்தது என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2000 ரூபாய் நோட்டில் குறைபாடு உள்ளதால் எளிதில் கள்ளநோட்டு அடிக்க முடிகிறது என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரூ.2000 நோட்டில் குறைபாடு என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False