
மத்திய பிதேச மாநில பா.ஜ.க இளைஞரணி தலைவர் பசு மாட்டிடம் தவறாக நடந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பசு மாட்டின் அருகே இளைஞர் ஒருவருடன் போலீசார் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பசுமாட்டை பதம் பார்த்த
மத்தியபிரதே பாஜக இளைஞரணி தலைவர். பசுவின் கதறலை கேட்டு ஊர் மக்கள் விரட்டி பிடித்து போலிஸில் ஒப்படைப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Thangachimadam Akkam Dmk என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஆகஸ்ட் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பசு மாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் பா.ஜ.க-வினர். அக்கட்சியை சேர்ந்த பிரமுகரே பசு மாட்டிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டார் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். படத்தை பார்க்கும் போது அந்த நபர் இந்தியர் போல இல்லை. மேலும், போலீசாரும் இந்திய போலீசார் போல இல்லை. படத்தில் எழுதப்பட்டிருந்த எழுத்தும் இந்திய மொழி போல இல்லை. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் ஒரு இணையதளம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை டைப் செய்து தேடினோம். அப்போது அது கமேர் (Khmer) என்ற கம்போடியா நாட்டின் மொழி என்று தெரிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: africaupdatenewspaper.com I Archive
மலேசியாவில் மாட்டிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர் என்று குறிப்பிட்டு இந்த படத்துடன் 2017ம் ஆண்டு செய்தி வெளியாகி இருந்தது தெரிந்தது. ஆனால், படத்தில் இருப்பது மலேசிய போலீஸ் போல இல்லை. கம்போடியா போலீஸ் எப்படி இருக்கும் என்று பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள போலீசார் அணிந்திருக்கும் சீருடையும் தொப்பியில் உள்ள போலீஸ் சின்னமும், சட்டைப் பை மீது தொங்கும் பதக்கமும் கம்போடியா போலீஸ் சீருடையும் ஒத்துப்போயின.

உண்மைப் பதிவைக் காண: alamy.com
கம்போடியாவில் இப்படி சம்பவம் நடந்ததா, இளைஞர் கைது செய்யப்பட்டாரா என தேடிப் பார்த்தோம். அப்போது 2015ம் ஆண்டு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக செய்தி நமக்கு கிடைத்தது. Kampuchea Thmey News என்ற நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தி தளத்தில் இந்த செய்தி வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த செய்தி தளத்தின் லிங்க் தற்போது அகற்றப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: cambodiaexpatsonline.com I Archive
இந்த புகைப்படம் கம்போடியாவில் எடுக்கப்பட்டது என்பதற்கு வேறு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. ஆனால், படத்தில் உள்ள இணைய தளத்தின் மொழி, போலீசாரின் சீருடை, 2015ம் ஆண்டு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இணையதளத்தில் வெளியான செய்தி போன்றவை இது கம்போடியாவில் நடந்திருக்கலாம் என்று முடிவுக்கு வர உதவுகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் பசு மாட்டுடன் வம்பு செய்த பா.ஜ.க நிர்வாகி யாரும் கைது என செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அடையாளம் தெரியாத நபர் பசு மாட்டிடம் வம்பு செய்ததாக செய்தி கிடைத்தன. ஆனால், பா.ஜ.க பிரமுகர் செய்ததாகவோ, அவர் கைது செய்யப்பட்டதாகவே செய்தி கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பசுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞரணி தலைவர் கைது என்று பகிரப்படும் படம் கம்போடியாவைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பசுமாட்டை பதம் பார்த்த பாஜக தலைவர் என பரவும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
