சீனா உருவாக்கிய பிளாஸ்டிக் பெண் என பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International தொழில்நுட்பம்

உலகின் முதல் பிளாஸ்டிக் பெண்ணை சீனா உருவாக்கியுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் செய்தி ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் சீனா உலகின் முதல் பிளாஸ்டிக் மனிதனை (பெண்ணை) உருவாக்கியது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வீடியோவில் ரோபோ போன்று அனிமேஷன் செய்யப்பட்ட பெண் பேசுவது போன்று உள்ளது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை யாராவது ஷேர் செய்துள்ளார்களா என்று பார்த்தோம். பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது. Michael Raj Y என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 16ம் தேதி இதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

சீனாவில் பிளாஸ்டிக் அரிசி உருவாக்கப்பட்டதாகக் கூறி முன்பு வதந்தி பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் கோஸ் உருவாக்கப்பட்டது என்று வதந்தி பரப்பினர். தற்போது பிளாஸ்டிக்கால் மனிதனையே உருவாக்கிவிட்டார்கள் என்று பரப்பி வருவது வேடிக்கையாக இருந்தது. மனிதனைப் போலவே செயல்படும் இயந்திர மனிதனை உருவாக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவை எல்லாம் ஆய்வு நிலையிலேயே உள்ளன.

இந்த வீடியோ ஏதாவது சினிமா அல்லது தொலைக்காட்சி சீரியலில் அல்லது வீடியோ கேமில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. எனவே, வீடியோவை InVid & WeVerify தளத்தில் பதிவேற்றி, புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் தேடினோம். அப்போது, இந்த வீடியோ வீடியோகேமில் இருந்து எடுக்கப்பட்டது என்று தகவல் கிடைத்தது. மேலும் இந்த வீடியோ 2018ம் ஆண்டே பிளேஸ்டேஷன் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. “Detroit: Become Human” என்ற பிளேஸ்டேஷன் வீடியோ கேமில் உள்ள Chloe என்ற அனிமேஷன் பெண்ணின் பேட்டி என்று குறிப்பிட்டிருந்தனர். 

உண்மைப் பதிவைக் காண: playstation.com I Archive

2036ம் ஆண்டில் அமெரிக்காவின் டெட்ராய்டில் ஆன்டிராய்டு மனித ரோபோக்கள் அறிமுகம் செய்யப்படுவதாகவும், அவை உயிருள்ள மனிதர்கள் போல நடந்து கொள்ளும் என்றும், அதனால் வரும் பிரச்னைகள் வைத்து இந்த சாகச விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். 

பிளே ஸ்டேஷன் வீடியோவை வைத்து சீனா பிளாஸ்டிக் மனிதனை உருவாக்கியுள்ளது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிளேஸ்டோர் வீடியோ கேம் கதாபாத்திரத்தின் வீடியோவை வைத்து சீனா பிளாஸ்டிக் மனிதனை உருவாக்கியுள்ளது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சீனா உருவாக்கிய பிளாஸ்டிக் பெண் என பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False