
மத்திய அரசின் அக்னிபத் போராட்டக்காரர்களைச் சுட்டுத் தள்ளுங்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல் குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமூர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அக்னிபத் போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள். மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளை சுட்டுத்தள்ள வேண்டும். பிரதமர் மோடியின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் உறங்கிக்கொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது – நிர்மல் குமார் (பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Md Thaha என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். இந்த நியூஸ் கார்டை பலரும் தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாதுகாப்புத் துறையில் நான்கு வருட வேலை என்ற அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திட்டத்தை ஆதரித்து பா.ஜ.க தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகி கூறியதாக பலரும் பகிர்ந்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம்.
இப்படி ஒரு நியூஸ் கார்டை கதிர் நியூஸ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். ஆனால், அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை.

நிர்மல் குமார் இப்படி ஏதும் கூறினாரா அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அவருடைய ட்விட்டர் பதிவில் இப்படி கூறியிருக்கிறாரா என அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார்.
“17 வயதில் ஏழை எளிய மக்களுக்கு வேலையை உறுதி செய்துள்ள மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சொத்துக்களை சேதம் விளைவிக்க மற்றும் கலவரம் ஏற்படுத்தத் தூண்டிவிடும் தேச விரோத சக்திகளை மக்கள் கண்டறிய வேண்டும்…” என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார். மேலும், அக்னிபத் திட்டத்தை நான் ஆதரிக்கிறேன் என்றும் போராட்டக்கரர்களை தேசதுரோகிகள் தூண்டிவிடுகிறார்கள் என்றும் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இதன் மூலம் அக்னிபத் போராட்டக்காரர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்று நிர்மல் குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அக்னிபத் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக ஐடி மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது, தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அக்னிபத் போராட்டக்காரர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று பா.ஜ.க.,வின் நிர்மல் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
