குஜராத்தில் நடந்த கொடூர கொலையை வைத்து தமிழ்நாட்டில் வாக்கு கேட்கும் பா.ஜ.க-வினர்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

குஜராத்தில் முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார், அதனால் பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சூரத்தில் ஒரு இந்து பெண் முஸ்லீமாக மாற மறுத்ததால் ஒரு மதவெறியன்  முஸ்லீம் ஒரு ஹிந்து  பெண்ணைக் கொன்றான்,  ஹிந்துகளே  நமது இந்து பெண்களை இப்படி வெட்டிக் கொண்டே இருப்பார்கள் . சகோதரர்களே இப்போதே விழித்துக்கொள் ஹிந்துவே எழுந்திரு…

*உள்ளாட்சி தேர்தலில் கூட, முஸ்லீம் கிறிஸ்தவ பகுதிகளில் இந்துகள் ஓட்டு கேட்க விட மறுக்கின்றனர்…* நமக்கான தலைவர் BJP மோடி… நம் ஒவ்வொரு ஓட்டும் கிறிஸ்தவ முஸ்லீம் மதவாத திருட்டு திமுக கட்சிகளை ஒழிப்பதாக இருக்கட்டும்… நம் இந்து சகோதரி பெண்கள் சிந்திய இரத்தத்திற்கும், உங்கள் வீட்டு பெண்கள் இப்படி இரத்தம் சிந்தாமல் இருக்கவும், தாமரைக்கு வாக்களிப்போம் இந்து சொந்தங்களே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை உமாஹைமவதி செல்வராஜ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத் மாநிலம் சூரத்தில் இளம் பெண் ஒருவர் முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் படுகொலை செய்யப்பட்டார் என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. என்ன நடந்தது, அந்த பெண் மதம் மாற மறுத்ததால், இஸ்லாமியக் காதலனால் படுகொலை செய்யப்பட்டாரா என்று ஆய்வு செய்தோம்.

குஜராத், சூரத், இளம் பெண் படுகொலை என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளியான செய்திகள் கிடைத்தன. அவற்றில் எதிலும் இஸ்லாமிய காதலன் என்று குறிப்பிடவில்லை. காதலிக்க மறுத்த காரணத்தால் இளம் பெண் படுகொலை செய்யப்பட்டார் என்று இருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: deshgujarat.com I Archive 1 I timesofindia I Archive 2

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் க்ரிஷ்மா நந்த்லால் வெகாரியா என்றும் கொலை செய்த நபரின் பெயர் ஃபெனில் பங்கஜ்பாய் கோயானி என்றும் குறிப்பிட்டிருந்தனர். இவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து ஒன்றாக படித்து வந்துள்ளனர். தன்னை காதலிக்கும்படி ஃபெனில் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் க்ரிஷ்மா மறுக்கவே அவரை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான் ஃபெனில். அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று இருந்தது.

கொலை செய்தவனின் பெயர் இஸ்லாமிய பெயர் போல இல்லை. மத மாற்ற பின்னணியையும் யாரும் குறிப்பிடவில்லை. எனவே, இது குறித்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ குஜராத்தி பிரிவின் உதவியை நாடினோம். 

கொலை செய்யப்பட்ட பெண், கொலை செய்த நபர் என இருவரும் ஒரே மதம், ஒரே சாதியைச் சார்ந்தவர்கள்தான். இது தொடர்பாக சூரத் ரூரல் எஸ்.பி உஷா ராதாவைத் தொடர்புகொண்டு பேசி உறுதி செய்துள்ளோம்.

சூரத் ரூரல் எஸ்.பி-யிடம் சமூக ஊடகங்களில் மத அடிப்படையில் பரப்பப்படும் தகவல் குறித்துத் தெரித்தோம். அதற்கு அவர், “மதம் அடிப்படையில் இந்த கொலை நடைபெறவில்லை. கொலையாளியும் இந்துதான். அந்த பெண் காதலிக்க மறுத்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த இளைஞரின் பெயர் ஃபெனில் பங்கஜ்பாய் கோயானி. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மூன்று நாள் போலீஸ் காவலில் வைத்து அவனிடம் விசாரணை நடத்தினோம். சமூக ஊடகங்களில் பரவும் இது போன்ற வதந்திகளைப் புறக்கணிப்பது நல்லது” என்று அவர் கூறினார்.

குஜராத்தில் காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே சாதி, மதத்தைச் சார்ந்த பெண்ணை, இளைஞர் ஒருவர் கொலை செய்த விஷயத்தை, விஷமத்தனமாக மாற்றி, மதம் மாற மறுத்ததால் இளம் பெண் கொலை செய்யப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத்தில் மதம் மாற மறுத்த இந்து பெண்ணை கொலை செய்த இஸ்லாமிய காதலன் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குஜராத்தில் நடந்த கொடூர கொலையை வைத்து தமிழ்நாட்டில் வாக்கு கேட்கும் பா.ஜ.க-வினர்!

Fact Check By: Chendur Pandian 

Result: False