
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி புகைப்படத்துடன் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் மாணவி ஒருவர் காமராஜர் பற்றி தெளிவாக அழகாக பேசுகிறார். நிலைத் தகவலில், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பள்ளியில் பேசிய பேச்சு. கண்ணீர் அஞ்சலி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை உழைப்பவரே உயர்ந்தவர் உயர்ந்தவர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஜூலை 23ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தனியார்ப் பள்ளியில் படித்து வந்த ஶ்ரீமதி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாணவி பல பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று அழகாகப் பேசினார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு ஆதாரமாக மாணவி பேசியது என்று ஒரு மேடைப் பேச்சு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோவில் உள்ள மாணவிக்கும் ஶ்ரீமதிக்கும் உருவ ஒற்றுமை துளியும் இல்லை. வீடியோ லேசாக அலசலாக மாற்றப்பட்டுப் பதிவிடப்பட்டுள்ளது. மங்கலாக இருப்பதால் இது ஶ்ரீமதியாக இருக்கலாம் என்று கருதி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். சிலர் வீடியோவில் இருப்பது ஶ்ரீமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வீடியோவை பதிவிட்டர் இந்த வீடியோவில் இருப்பது ஶ்ரீமதிதான் என்பதை உறுதி செய்ய எந்த ஒரு ஆதாரத்தையும் பதிவிடவில்லை.
எனவே, வீடியோவில் இருக்கும் பெண் யார் என்று அறிய ஆய்வு செய்தோம். காமராஜர் பற்றி பேசுவதால், காமராஜர், மேடைப் பேச்சு, சொற்பொழிவு என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி யூடியூபில் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கிடைத்தது.

கௌமார மடாலயம் என்ற யூடியூப் பக்கம் இந்த வீடியோவை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவேற்றம் செய்திருந்தது. காமராஜர் வரலாறு என்று குறிப்பிட்டிருந்தனர். வீடியோவை பார்த்தோம். அதில் மாணவியின் பெயர் கு.பவதாரணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாணவி தன்னுடைய பேச்சின் தொடக்கத்தில் என் பெயர் கு.பவதாரணி, எட்டாம் வகுப்பு அ பிரிவு என்று குறிப்பிட்டார். அந்த மாணவியே தன்னுடைய பெயர் பவதாரணி என்று குறிப்பிடுவதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தவறானது என்பது உறுதியாகிறது.
தொடர்ந்து தேடிய போது கௌமார மடாலயம் யூடியூப் பக்கம் அந்த மாணவியின் பல்வேறு பேச்சுக்களை தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. இவர் கோவை சிரவை ஆதீனம் கௌமார மடாலயப் பள்ளியில் படித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஶ்ரீமதி பேசியதாகப் பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி பேசியது என்று பரவும் வீடியோ கோவையைச் சார்ந்த பவதாரணி என்பருடையது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி பேச்சு என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
