Rapid Fact Check: வெளிநாட்டில் தீபாவளி கொண்டாட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

சர்வதேசம் | International

வெளிநாட்டில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் மிக நீண்ட சர வெடிகளை ஒன்று சேர்த்து வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தீபாவளியன்று நம்ம ஊர்ல பட்டாசு வெடிக்க ஏகப்பட்ட கட்டுப்பாடு 2-மணிநேரம்தான் வெடிக்கனும்… மீறினால் சிறை… ஆனால் வெளிநாட்டுல எப்படி பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுறாங்க பாருங்க.. அடேங்கப்பா…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில அரசு தான் காரணம் என்பது போல பலரும் அரசை விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டில் எல்லாம் ஏராளமான பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்படுவதாகவும் இந்தியாவில் தான் கட்டுப்பாடு இருப்பது போலவும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

ஆனால் இந்த வீடியோவை சில வருடங்களுக்கு முன்பு ஃபேக்ட் செக் செய்த நினைவு இருந்தது. எனவே, இது வெளிநாட்டில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்த வீடியோவா என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2021 ஏப்ரல் மாதம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது தெரிந்தது. 

சீன மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. மொழிபெயர்த்துப் பார்த்த போது, “பைஷாதுன் மாட்சு சுற்றுப்பயணத்திற்குச் செல்கிறார்” என்று வந்தது. அந்த சீன வார்த்தையை அப்படியே காப்பி செய்து யூடியூபில் தேடிய போது வேறு பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. கூகுளில் தேடிய போது இது தொடர்பாக வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.

அதில் தைவானில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மிகப்பெரிய மத ஊர்வலங்களில் ஒன்று பைஷாதுன் மாட்சு யாத்திரை என்றும், இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளிக்கப்படும் வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இது எந்த மதத்தைச் சார்ந்த வழிபாடு என்று அறிய தொடர்ந்து தேடிய போது, இது சீனாவின் டாவோயிச மதத்தைச் (Taoist religious) சார்ந்தது என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த வீடியோ வெளிநாட்டில் தீபாவளி கொண்டாடிய போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

முடிவு:

தைவானில் டாவோயிச கோவில் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கப்பட்ட வீடியோவை வௌிநாட்டில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடும் மக்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:Rapid Fact Check: வெளிநாட்டில் தீபாவளி கொண்டாட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False