FACT CHECK: யூரோ கோப்பை வெற்றியை இத்தாலி கொண்டாடிய வீடியோவா இது?

அரசியல் சமூக ஊடகம் சர்வதேசம்

யுரோ கோப்பை கால்பந்தாட்டத்தில் வெற்றி பெற்றதை இத்தாலி நாட்டினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மிக நீண்ட தூரத்துக்கு சரவெடி பட்டாசு வெடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யூரோ கோப்பை வெற்றியைக் கொண்டாடும் இத்தாலி…

எங்கந்த ‘தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சா சுற்றுச் சூழல் மாசுபடும்’ ன்னு குலைச்ச BBC நாயி… ? !!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Rajendran Chennimalai என்பவர் ஜூலை 13 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமூக ஊடகங்களில் எல்லாவற்றுக்கும் மத சாயம் பூசுவது மற்றும் செய்தி ஊடகங்களை திட்டுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் எங்கோ நடந்த ஒரு நிகழ்வை இங்குள்ள தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிப்புடன் இணைத்து, ஊடகங்களை திட்டி பதிவிட்டு வருகின்றனர். வீடியோவைப் பார்க்கும் போது யூரோ கோப்பையை வென்றதால் இத்தாலியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது போல இல்லை. தென்கிழக்கு ஆசியா, சீனாவைச் சார்ந்தவர்கள் போன்று மக்கள் உள்ளனர். புகைப்படம் எடுக்கும் நபர்கள் முதுகில் சீனம் போன்ற மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. எனவே, இது இத்தாலி கொண்டாட்டம்தானா என்ற சந்தேகம் எழுந்தது.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ தைவானில் உள்ள மியாவோலி கவுண்டியில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. 

அசல் பதிவைக் காண: YouTube 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் அடங்கிய முழு நீள வேறு ஒரு வீடியோ யூடியூபில் நமக்கு கிடைத்தது. அதில் Baishatun Mazu என்ற புனித பயணத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த ஆண்டு Baishatun Mazu புனித பயணம் ஏப்ரல் மாதம் நடந்தது என்று பல செய்திகள் மற்றும் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. 

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I reddit.com I Archive 2

இதன் மூலம் இந்த வீடியோ இத்தாலியில் யுரோ கோப்பை வெற்றியைத் தொடர்ந்து நடந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

யுரோ கோப்பை வெற்றிக்காக இத்தாலியில் பட்டாசு வெடிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:யூரோ கோப்பை வெற்றியை இத்தாலி கொண்டாடிய வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply