இந்தியா தேடும் பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தெளிவாக இல்லாத, குண்டு வெடிப்பு வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் ஜனவரி 1, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "முடிஞ்சு... 2024 இன் முதல் கணக்குத் தொடக்கம்: காந்தகார் விமானக் கடத்தல்காரன், ஜெய்ஷ் இ முஹம்மத் இயக்கத்தின் தலைமை மௌலானா மசூத் ஆஸார் வெடிகுண்டிற்கு பலி. இன்று அதி காலை 5.00 மணி அளவில் பஹவல்பூர் மசூதி யிலிருந்து திரும்பிச் செல்கையில் அவனது காரின் வலது பக்கக் கதவருகில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் ஜன்னதிற்கு பயணமானான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் மவுலானா மசூத் அசார் ஜனவரி 1, 2024 அன்று பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்திருக்கலாம் என்று செய்திகள் வௌியானது. மசூத் அசார் உயிரிழந்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. ஆனால், ஜனவரி 1ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் மசூத் அசார் சிக்கியிருக்கலாம் என்பது போன்று தெளிவற்ற செய்திகளே வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், மசூத் அசார் குண்டு வெடிப்பில் சிக்கியதாக குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் சிலர் விடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றினோம். ஆனால் முழுவதும் தெளிவற்றதாகவே இருந்தது. குண்டுவெடிப்பு காட்சியை சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: indiatodayne.in I Archive

2023 நவம்பர் மாதம் பாகிஸ்தானின் Dera Ismail Khan என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்றும், அதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்றும் இந்த வீடியோவில் இடம்பெற்ற ஒரு காட்சியை வைத்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்தது.

தொடர்ந்து தேடிய போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை சீன மொழி ஊடகம் ஒன்று 2023 நவம்பர் 4ம் தேதி யூடியூபில் பதிவிட்டிருந்தது தெரிந்தது. அதில், "பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகே நடந்த குண்டு வெடிப்பில் ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டனர். 21 பேர் காயம் அடைந்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மசூத் அசார் ஜனவரி 1, 2024 அன்று நடந்த குண்டு வெடிப்பில் சிக்கியதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவன் உயிரிழந்தான் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ மசூத் அசார் குண்டு வெடிப்பில் சிக்கியதாகக் கூறப்படும் நாளில் எடுக்கப்பட்டது இல்லை. இந்த வீடியோ 2023 நவம்பரிலேயே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மசூத் அசார் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பு வீடியோ என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குண்டு வெடித்து மசூத் அசார் உயிரிழந்த காட்சி என்று பரவும் வீடியோ 2023 நவம்பரில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மசூத் அசார் குண்டுவெடிப்பில் இறந்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False