‘ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே மோடி தியானம் செய்கிறார்’ என்று அண்ணாமலை கூறினாரா?
ஒடிஷா ஜெகன்நாதர் கோவில் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள உள்ளார் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "சாவியை கண்டுபிடிக்கவே தியானம்! மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது ஜெகன்நாதர் கருவூல சாவியுடன்தான் திரும்பி செல்வார் - தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒடிஷாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவில் கருவூல சாவி தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டது என்று சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசியிருந்தார். இந்த சூழலில் கன்னியாகுமரியில் மூன்று நாள் தியானம் மேற்கொள்ள மோடி வருகிறார். இந்த இரண்டையும் இணைத்து அண்ணாமலை கூறியது போன்று போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே போலியானது என்று தெளிவாகத் தெரிகிறது. இதையும் பலரும் பகிர்ந்து வரவே, வேறு வழியின்றி ஃபேக்ட் செக் செய்தோம். முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை தினமலர் வெளியிடவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ள அதன் சமூக ஊடக பக்கங்களை பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று அண்ணாமலை புகைப்படத்துடன் எந்த நியூஸ் கார்டையும் தினமலர் வெளியிடவில்லை என்பது தெரிந்தது.
மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வடிவமைப்புடன் தற்போது தினமலர் நியூஸ் கார்டுகளை வெளியிடவில்லை என்பதையும் காண முடிந்தது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த ஜனவரி 10, 2024 அன்று இதே போன்ற நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், "தமிழக அமைச்சா;கள் 3 பேர் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெளிவானது.
இதை உறுதி செய்துகொள்ளத் தினமலர் நாளிதழ் ஆசிரியர் குழுவைச் சார்ந்த ஒருவருக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்க மோடி தியானம் செய்கிறார் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:‘ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே மோடி தியானம் செய்கிறார்’ என்று அண்ணாமலை கூறினாரா?
Written By: Chendur PandianResult: False