
கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி. செந்தில்குமார் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தி.மு.க எம்.பி. செந்தில் குமார் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைச் சேர்த்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கே.என்.நேரு பதவி விலக வேண்டும். சுய மரியாதை இல்லாமல் கட்சியில் இருப்பது வெட்கக்கேடு. பங்காரு அடிகளாரை சந்தித்த கேஎன் நேரு மீது மறைமுக சாடல். திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார்” என்று இருந்தது. இந்த பதிவை சேலவாயல் வினோத் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 14ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு அரசின் அமைச்சருமான கே.என்.நேரு, மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரைச் சந்தித்த போது தரையில் அமர்ந்தது சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. பலரும் அமைச்சர் தரையில் அமர்ந்தது பற்றி விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் தி.மு.க எம்.பி செந்தில் குமார் அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டு வழக்கமாகத் தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. இதன் டிசைன், தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது. மேலும், மேலே அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் கூறியதாக குறிப்பிட்டுவிட்டு, கீழே மறைமுகமாகச் சாடல் என்று குறிப்பிட்டிருந்தனர். இது முன்னுக்குப் பின் முரணான தகவலாக இருந்தது. அமைச்சர் தரையில் அமர்ந்தது பற்றி தி.மு.க எம்.பி மறைமுகமாக விமர்சித்திருந்தார். எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
முதலில் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் தி.மு.க எம்.பி செந்தில் குமார் குறிப்பிட்டது தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. இது தொடர்பாக தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்ட அந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியானது என்று உறுதி செய்தனர்.
Archived Link I indianexpress.com I Archived Link
அடுத்தது தி.மு.க எம்.பி செந்தில் குமார் வெளியிட்ட ட்விட்டர் பதிவை பார்த்தோம். அதில் எந்த இடத்திலும் கே.என்.நேரு பெயரை குறிப்பிடவில்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று குறிப்பிடவும் இல்லை. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.
முடிவு:
கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில் குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
