“கி.வீரமணி நடத்திவைத்த பேரன் திருமணம்”- வீடியோ உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

தாலி அகற்றும் போராட்டம் நடத்திய கி.வீரமணி தன்னுடைய பேரன் திருமணத்தை தாலி எடுத்து கொடுத்து நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

VEERAMANI 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

“ஊரெல்லாம் தாலியறுக்கும் கி.வீரமணி பேரனுக்கு தாலி கட்டி நடந்த திருமணம்! ஊருக்குத் தான் உபதேசமோ??” என்று நிலைத்தகவலுடன் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், சுயமரியாதை திருமணம் நடக்கிறது. கி.வீரமணி உறுதிமொழி வாசிக்க, அதை மணமகன் சொல்கிறார். பின்னர் தாலியை அவர் எடுத்துக்கொடுக்க, பெண்ணின் கழுத்தில் மணமகன் கட்டுகிறார். பின்னர், மணமகள் உறுதி மொழி ஏற்கிறார்.

2.39 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவை, திப்பு சுல்தான் என்பவர் ஏப்ரல் 28, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இந்த வீடியோ, செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோ ஓட ஆரம்பித்ததுமே, மணமகன் உறுதி ஏற்பு பகுதி வருகிறது. அதில், மணமகன் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சில வார்த்தைகள் தெளிவில்லை. நமக்கு கேட்ட வகையில், மணமகன் கூறியது, “திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் ….. பாலசரஸ்வதி ஆகியோரின் செல்வன் ஹரீஷ் ஆகிய நான்… தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் வள்ளியூர் திருவாளர்கள் பாலசுப்பிரமணியன், ஹேமலதா ஆகியோர்களது செல்வி ஸ்நேகா ஆகிய தங்களை இன்று முதல் வாழ்வில் இணையராக ஏற்றுக்கொள்வதுடன், வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு ஏற்கும் சம உரிமை படைத்த உற்ற நண்பர்களா வாழ்வோம் என்று உறுதி மொழி ஏற்கிறேன். அந்த ஒப்பந்தத்தின் படி இந்த மலர் மாலைகளையும் பொன் அணிகளையும் அணிவிக்கிறேன்” என்கிறார். அதைத் தொடர்ந்து தாலியை கி.வீரமணி எடுத்துக்கொடுக்கிறார். அதை வாங்கிய மணமகன் அதை மணமகள் கழுத்தில் கட்டுகிறார்.

இவர் கி.வீரமணியின் பேரனா என்று ஆய்வு நடத்தினோம். கி.வீரமணியின் பேரன் திருமணம் என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது, 2018 ஜூன் 18ம் தேதி தினத்தந்தி வெளியிட்ட செய்தி மற்றும் படம் நமக்குக் கிடைத்தது.

VEERAMANI 3.png

அழைப்பிதழ் அச்சிடாமலே நடந்த கி.வீரமணி இல்லத் திருமணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி-மோகனா தம்பதியினரின் பேரனும், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளருமான வீ.அன்புராஜ்-சுதா ஆகியோரின் மகனுமான கபிலனுக்கும், கோபாலகிருஷ்ணன்-சுகுணா ஆகியோரின் மகள் மகாலட்சுமிக்கும் சென்னை பெரியார் திடலில் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை கி.வீரமணி நடத்தி வைத்தார். இரு வீட்டார் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்” என்று இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோவில் மணமகன் பெயர் ஹரீஷ், மணமகள் பெயர் ஸ்நேகா என்று இருந்தது. ஆனால், வீரமணியின் பேரன் பெயர் கபிலன் என்று தினத்தந்தி செய்தியில் கூறப்பட்டு இருந்தது. மணமகள் பெயர் மகாலட்சுமி என்று இருந்தது.

இதே செய்தி, திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழிலில் செய்தியாக வெளிவந்தது. அதில் தாலி இல்லாமல் மோதிரம் மாறி திருமணம் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

வீரமணி பேரன் திருமணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். பதிவு கீழே…

Archived Link

வீடியோவில் மணமகன் உறுதிமொழி ஏற்கும்போது தன்னுடைய பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் என்கிறார். கி.வீரமணியின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டமா என்று ஆய்வு செய்தோம். ஆனால், கி.வீரமணி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது.

VEERAMANI 4.png

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட வீடியோவில் இருப்பது கி.வீரமணியின் பேரன் திருமணம் இல்லை என்பது உறுதியானது. நம்முடைய ஆய்வில் நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், கி.வீரமணி நடத்திவைத்த திருமண வீடியோ ஒன்றை வெளியிட்டு, அது கி.வீரமணியின் பேரன் திருமணம் என்று தவறான தகவல் பரப்பியது உறுதியாகி உள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“கி.வீரமணி நடத்திவைத்த பேரன் திருமணம்”- வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •