
தூத்துக்குடி மாவட்டம் குலசை கடற்கரையில் புயல் உருவான காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
கடற்கரை அருகே சூறாவளி காற்று சுழன்று சுற்றும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “குலசை கடற்கரையில் புயல் உருவாகிய காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில வெளிநாடுகளில் தரையில் சுழல் சூறாவளி காற்று வீசுவது போன்று வீடியோவை பார்த்திருப்போம். அது போன்ற சிறிய புயல் தூத்துக்குடி மாவட்டம் குலலை எனப்படும் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் உருவானதாகச் சிலர் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: weather.com I Archive
இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அவற்றில் சைப்ரஸ் கடற்கரையில் ஏற்பட்ட சூறாவளி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
FOX Weather என்ற யூடியூப் பக்கம் அக்டோபர் 10, 2022ம் ஆண்டு இந்த வீடியோவை வெளியிட்டிருந்தது. அதில் இந்த சூறாவளி சைப்ரஸ் கடற்கரையில் தோற்றியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கூகுளில் தேடிய போது, இந்த சூறாவளியை வேறு பகுதியிலிருந்து எடுத்த வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. நியூயார்க் போஸ்ட் இணையதளத்திலும் இது தொடர்பாக செய்தி வெளியாகி இருந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவோ 2024 டிசம்பரில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த வீடியோவோ 2022ம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதையும், சைப்ரஸ் கடற்கரையில் இந்த சூறாவளி ஏற்பட்டதாகவும் செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் குலசை கடற்கரையில் புயல் உருவானபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சைப்ரஸ் கடற்கரையில் 2022ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி வீடியோவை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டின கடற்கரையில் ஏற்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:குலசை கடற்கரையில் உருவான புயல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
