FactCheck: மழை, வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி?- எடிட் செய்த வீடியோவால் சர்ச்சை

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’மழை வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி செய்தனர்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Tweet Link I Archived Link

சென்னையை அடுத்த தாம்பரம், திருமலை நகரில் குடியிருப்பு பகுதி முழுக்க, மழை நீர் சூழ்ந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அதுபற்றி சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில் பேசும் பொதுமக்களில் ஒருவர், ‘’வெள்ளம் பாய்ந்து ஓடும்படி செய்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி,’’ எனக் கூறி, கேலி செய்யும் பாங்கில் பேசுகிறார்.

இதனை உண்மையா என சந்தேகம் கேட்டு, நமது வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பியிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு மேற்கொண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை முழுமையாகப் பார்க்கும்போது, அதில் பேசும் நபரின் வாயசைவுக்கும், நாம் கேட்கும் குரலுக்கும் முரண்பாடு இருப்பதை உணர முடிகிறது. இதன்பேரில், சன் நியூஸ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டோம்.

‘’இது வேண்டுமென்றே நகைச்சுவை நோக்கில் எடிட் செய்யப்பட்ட வீடியோ. யாரோ ஒருவர் இப்படி செய்து பகிர, மற்றவர்கள் உண்மை என நம்பி பரப்ப தொடங்கியுள்ளனர். நாங்கள் வெளியிட்ட உண்மையான வீடியோவை யூடியுப்பில் நீங்கள் பார்க்கலாம்,’’ என்று கூறி, அதற்கான லிங்க் கொடுத்தனர்.

மேற்கண்ட வீடியோவின், 2.04 நிமிடத்தில் இருந்து, 4.03 நிமிடம் வரை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் உள்ள அதே காட்சிகள் வருகின்றன. ஆனால், இதில் பேசும் நபரின் உண்மையான குரல் வேறாகவும், அவர், மழை, வெள்ளம் பற்றி கவலை தெரிவிக்கும் வகையில் பேசுவதையும் காண முடிகிறது. எனவே, இந்த வீடியோவை எடுத்து, அதன் குரல் பதிவை நீக்கிவிட்டு, புதிய குரல் பதிவை சேர்த்து, இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

உண்மையான காட்சியையும், எடிட் செய்து குரல் சேர்க்கப்பட்ட வீடியோவையும் ஒப்பீடு செய்து, அதற்கான லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:மழை, வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி?- எடிட் செய்த வீடியோவால் சர்ச்சை

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered