
தன்னுடன் சேர்ந்து பாரத் மாதாகீ ஜெ என்று கோஷம் எழுப்பும்படி தொண்டர்களுக்கு அமித்ஷா கூற, தொண்டர்களோ அமைதியாக இருந்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. தொண்டர்களை நோக்கி அமித்ஷா “போலியோ (சொல்லுங்கள்) பாரத் மாதாகீ” என்கிறார். கேமரா கோணம் கூட்டத்தை நோக்கி செல்கிறது. தொண்டர்கள் அமைதியாக இருக்கிறார்கள். மீண்டும் அமித்ஷா “பாரத் மாதாகீ” என்கிறார். அப்போதும் தொண்டர்கள் அமைதியாக இருக்கின்றனர். வீடியோவின் மீது “இந்தி தெரியாது போடா சொட்டை” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமித்ஷா கோஷம் எழுப்ப இந்தி தெரியாததால் தொண்டர்கள் அமைதியாக இருந்தது போன்று வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் அமைதியாக இருக்கலாம். ஆனால், எல்லோருமே கடமைக்கு அமர்ந்திருப்பது போன்று வீடியோ காட்சி இருப்பது இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை உறுதி செய்கின்றன. ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
வீடியோவில் “LIVE: Basirhat, West Bengal” என்று உள்ளது. எனவே, மேற்கு வங்கத்தில் நடந்த கூட்டத்தின் வீடியோவை எடுத்து எடிட் செய்திருக்கலாம் என்று அதன் அடிப்படையில் தேடினோம். யூடியூபில் “Amit Shah, Basirhat, West Bengal” என்று டைப் செய்து தேடினோம். அப்போது ரிப்பப்ளிக் டிவி-யின் வீடியோ கிடைக்கவில்லை. ஆனால், அமித்ஷாவின் யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ நமக்குக் கிடைத்தது. அதை பார்த்தோம். 3.30வது நிமிடத்தில் பாரத் மாதாகீ என்று அமித்ஷா கோஷம் எழுப்புகிறார். பதிலுக்கு தொண்டர்கள் “ஜே” என்கிறன்றர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற அமித்ஷா கோஷம் எழுப்புவது, தொண்டர்கள் அமைதியாக இருப்பது போன்ற எல்லா காட்சிகளும் அமித்ஷாவின் யூடியூப் பக்கத்தில் நமக்கு கிடைத்த வீடியோவில் இருந்தது. எனவே, இந்த வீடியோவைத்தான் எடிட் செய்து தவறாக பதிவிட்டுள்ளது என்பது உறுதியாகிறது.
இரண்டு வீடியோக்களை ஒப்பிட்டு நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் 2021ம் ஆண்டிலேயே வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையில்லை, எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
‘பாரத் மாதாகீ’ என்று அமித்ஷா கோஷமிட்ட போது இந்தி தெரியாததால் அமைதியாக இருந்த தொண்டர்கள் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“பாரத் மாதாகீ” என்று அமித்ஷா கோஷமிட்டபோது தொண்டர்கள் அமைதியாக இருந்தனரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
