பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்திற்குள் வைத்துத் தாக்கி பேசிய பெண் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதில், "தூக்கிலே தொங்க வேண்டியவனெல்லாம் இங்கே உட்கார்ந்திருக்கானுங்க. மக்களே, உங்கள் அருமை மகள்களை எல்லாம் பத்திரமா பாத்துங்கோங்க ஏன்னா கொழந்தை, குட்டி இல்லாத வர்கத்தை சேர்ந்தவனுகதான் நாட்டை ஆள்றானுக, இங்கே உட்காரந்திருக்கானுக. பதவியிலே உட்காந்துகிட்டு பொண்ணுகளோட பாதுகாப்பு பத்தி பேசிறீங்க, வெட்கப்படுங்கடா, பொண்ணுகளுக்கு இப்படியெல்லாம் நடக்குது.

பெண்களின் பாதுகாப்பு மகள் அப்படினு இப்படினெல்லாம் பேசி மயக்குனுனாக, வெட்கங்கெட்டவனுக ஆனா பொண்ணுக பலாத்கார சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு போராடினா உங்க டெல்லி போலீஸ் அவங்களை புடுச்சி ஜெயில்லே போட்றானுக. வெட்கங்கெட்டவனுகளே, தண்ணிலே முங்கி சாவுங்கடா. ஏண்டா பொண்ணுகளோட பாதுகாப்பு, மகள்கள் எங்கிறதெல்லாம் ஒரு வார்த்தையாக மட்டும்தாண்டா பாக்குறீங்க. உங்களுக்கெல்லாம் மகளுக இல்லையா, அக்கா தங்கச்சிக இல்லையா? ஏண்டா உங்களுக்கெல்லாம் அப்பனுக இல்லையாடா, நீங்க யாருக்கும் அப்பனா இல்லையாடா.

ஒவ்வொருவத்தொரும் ரேப்லே வேட்டையாடப்பட்றாங்க. ஆனா இங்கே சபையிலே உட்கார்ந்திருக்வனுங்களுக்கு ஒரு கவலையும் இல்லை, அதை கண்டுக்கிறதும் இல்லை. ஆசிபா எட்டு வயது பச்சைக்குழந்தை. கட்டுவா ஜம்மு கேஸ்ல குற்றவாளி பாஜக காரன்தான். உன்னாவ் ரேப் கேஸ் குற்றம் செய்த ஆளு எம்எல்ஏ குல்தீப் குமார் செங்கார் பாஜககாரன்தான்.

ஷாஜஹான்பூர் சின்மயானந்தா சாமி ஒரு பெண்ணை பிளாக் மெயில் பண்ணினான். அவளை மசாஜ் பண்ணினான், அவன் யாரு தெரியுமா? முன்னாள் உள்துறை அமைச்சரா பாஜக அரசிலே இருந்தவன்தான். நம்ம பிரதமரே ஒரு பொண்ணுக்காக சிஐடி, துப்பறியும் வேலையை பார்த்தவருதானே. நம் நாட்டின் உள்துறை அமைச்சரா ஒரு தடிப்பார் ஜண்டாவையே உட்கார வெச்சிருக்கானுக. மத்தியிலே இப்படியான அரசுதான் ஆட்சியிலே இருக்கானுக" என்று அவர் பேசியதாக தமிழாக்கம் செய்யப்பட்டு சப்டைட்டில் போடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில் "என்னா அடி எங்க வீட்டு அடியா உங்க வீட்டு அடியா செம்ம அடிப்பா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Mohamed Bin Ahamed என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 13ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் பெண் எம்.பி ஒருவர் பேசுவது போலவும் அதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டிருப்பது போலவும் உள்ளது. அந்த பெண் மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசும் போது எல்லாம் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் மிகவும் பரிதாபமாகப் பார்ப்பது போல வீடியோ உள்ளது. இந்த வீடியோ நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டது போல உள்ளது.

நாடாளுமன்றத்தில் வைத்து நரேந்திர மோடி, அமித்ஷா முன்னிலையில் பெண் எம்.பி பேசினாரா என்று ஆச்சரியமாக இருந்தது. மேலும், வீடியோவில் ஒரு காட்சியில் அந்த அவையைக் காட்டுகிறார்கள். அது நாடாளுமன்றத்தில் மக்களவை போலவோ, மாநிலங்களவை போலவோ இல்லை. எனவே, இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. வீடியோவில் பேசும் பெண்மணியின் படத்தை தனியாக பதிவிட்டுத் தேடினோம். அவர் டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ராக்கி பிர்லா என்று குறிப்பிட்டு சில பதிவுகள் கிடைத்தன. எனவே, டெல்லி பெண்களின் பாதுகாப்பு பற்றி ராக்கி பிர்லா என்று கூகுளில் ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் உண்மையான, முழுமையான வீடியோ கிடைத்தது.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி டெல்லி சட்டமன்றத்தில் பெண்களின் பாதுகாப்பு பற்றி ராக்கி பிர்லா பேசியது என்று குறிப்பிட்டு டிசம்பர் 7, 2019 அன்று யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவிலேயே அவரது பெயர் ராக்கி பிர்லா என்றும், டெல்லி சட்டமன்ற துணை சபாநாயகர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்பது தெளிவானது.

அவர் பேசியது தொடர்பாக நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா முன்னிலையில் அவர் பேசினாரா, இல்லையா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். நம்முடைய ஆய்வில், வீடியோவில் இருக்கும் பெண்மணியின் பெயர் ராக்கி பிர்லா என்பதும், அவர் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் டெல்லி சட்டமன்றத்தில் பேசிய பேச்சின் வீடியோவும் நமக்கு கிடைத்துள்ளது.

ராக்கி பிர்லா டெல்லி நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு வீடியோவை எடிட் செய்து, நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் முன்னிலையில் அவர் பேசியது போன்று தவறான புரிதல் ஏற்படும் வகையில் வீடியோவை வெளியிட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய பெண் என்று பரவும் வீடியோ டெல்லி சட்டமன்றத்தில் எடுக்கப்பட்டது என்பதும், அந்த பெண் பேசும் போது அங்கு அமித்ஷா, நரேந்திர மோடி உள்ளிட்டோர் இல்லை என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெண் பாதுகாப்பு பற்றி மோடி, அமித் ஷாவை நேரடியாக விமர்சித்துப் பேசிய பெண்- இந்த வீடியோ நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: False