திருமோகூர் கோவிலில் செல்போன் டவர் மூலம் இந்து சமய அறநிலையத் துறை பணம் சம்பாதிக்கிறதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மதுரை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல்போன் டவர் வைக்க இந்து சமய அறநிலையத் துறை அனுமதி கொடுத்துள்ளது என்று ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கோவிலின் மேல் பகுதியில் செல்போன் டவர் இருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர்.

1400 வருட பழமையான மண்டபம் மைல் வைக்க ASI அனுமதி பெற்றனரா?

நம்மாழ்வார் பாடிய கோவில் மண்டபத்தில் வாடகை சம்பாதிக்க HRCE அராஜகம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை கழகம் இல்லாத் தமிழகம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஜூன் 16ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெருமாள் கோவிலில் செல் போன் டவர் அமைக்க அனுமதி கொடுத்து, வாடகை பெற்று வருகிறது இந்து சமய அறநிலையத் துறை என்று பலரும் கொந்தளிப்புடன் பதிவிட்டு வருகின்றனர். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் எங்குள்ளது, அங்கு செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் எங்குள்ளது என்று கூகுளில் தேடினோம். மதுரைக்கு அருகே உள்ளது என்று தெரிந்தது. மேலும், கோவில் படங்கள் கூகுள் மேப்பில் இருந்து நமக்கு கிடைத்தன. அவற்றைப் பார்த்தோம்… அப்போது இந்த டவர் பல ஆண்டுகளாக இருப்பது தெரிந்தது. 2017ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தில் கோவிலின் மேல் டவர் இருப்பதைக் காண முடிந்தது. அந்த டவரில் தொலைத் தொடர்புக்கு உரிய கருவிகள் எதையும் காண முடியவில்லை. இரண்டு ஒலி பெருக்கி மட்டுமே கட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து 2020, 2021ம் ஆண்டு பதிவிட்ட புகைப்படங்களைப் பார்த்தோம். அதிலும் டவர் காலியாக இருப்பதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் டவரின் உச்சியில் மின்னல் தாக்காமல் இருக்க அமைக்கப்படும் இடிதாங்கி போன்ற அமைப்பு இருப்பதை காண முடிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: Google Maps I Archive

2018ம் ஆண்டு பதிவிடப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ காட்சியைப் பார்த்தோம். அதிலும் கோவிலின் மீது இரும்பு கோபுரம் இருப்பதை காண முடிந்தது. ஆனால் செல்போன் டவருக்கு உரிய கருவிகள் எதுவும் அதில் இல்லை. இது தொடர்பாக கருத்தறிய இந்து சமய அறநிலையத் துறையைத் தொடர்புகொண்டு பேசினோம். ஆனால் சரியான பதில் நமக்கு கிடைக்கவில்லை. கோவில் செயல் அதிகாரியைத் தொடர்புகொண்டோம். அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: Google Maps I Archive

இந்த சூழலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர் “அந்த கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு இடி – மின்னல் பாதிப்பிலிருந்து கோவில் மண்டபத்தைப் பாதுகாக்க இடி தாங்கி அமைக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை எடுத்து பகிர்ந்து செல்போன் டவர் அமைத்துவிட்டனர் என தவறான பிரசாரத்தை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இடிதாங்கி அமைக்க 2014ம் ஆண்டு அளிக்கப்பட்ட அனுமதி கடிதம் உள்ளது. அதை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளேன்” என்றார்.

Archive

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவிலில் அத்துறை சார்பில், 2014ம் ஆண்டு அமைக்கப்பட்ட இடிதாங்கி கோபுரத்துக்கு 2022ல் நெட்டிசன்கள் பொங்கியிருக்கின்றனர். கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இடி தாங்கியைப் புகைப்படம் எடுத்து செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது என்று விஷம பிரசாரம் செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் கோவிலில் செல்போன் கோபுரம் அமைத்து வாடகை வாங்கும் இந்து சமய அறநிலையத் துறை என்று பரவும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல்போன் டவர் அமைக்க இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திருமோகூர் கோவிலில் செல்போன் டவர் மூலம் இந்து சமய அறநிலையத் துறை பணம் சம்பாதிக்கிறதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply