
தந்தைக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்து உயிர் வாழ வைத்திருக்கிறாள் மகள் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் பின்னணி என்ன என்று பார்த்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அறுவை சிகிச்சை செய்துகொண்ட தந்தை, மகள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “தந்தையின் கிட்னி செயலிழந்து விட்டதால் தன்னோட ஒரு கிட்னியை கொடுத்து உயிர் வாழ வைத்திருக்கிறாள் மகள். இந்த மண்ணி;ல இது போல் யாரும் இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த பதிவை Kanaga Rajan Kanaga Rajan என்பவர் 2021 ஆகஸ்ட் 2ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தில் உள்ளவர்கள் தந்தை, மகளாக இருக்கலாம். ஆனால் படத்தைப் பார்க்கும் போது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டது போல இல்லை. கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இருப்பது போன்று தழும்பு இருந்தது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது படத்தில் இருப்பது பூஜா பிஜார்னியா என்று தெரிந்தது. இவர் தன்னுடைய தந்தையின் கல்லீரல் செயலிழந்த நிலையில், தன்னுடைய கல்லீரலில் இருந்து சிறு பகுதியை தானமாக வழங்கி, தந்தையின் உயிரைக் காப்பாற்றினார் என்று 2017ம் ஆண்டு வெளியான பல செய்திகள் நமக்கு கிடைத்தன.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive
அவருடைய பெயரை வைத்து அவருடைய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களைத் தேடி எடுத்தோம். அவர் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களை லாக் செய்து வைத்திருந்தார். இருப்பினும் சுய விவர குறிப்பில் அவரைப் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 2017ம் ஆண்டு வெளியான கட்டுரையை வைத்திருந்தார்.
தொடர்ந்து தேடியபோது அவர் அளித்த பேட்டி வீடியோவும் கிடைத்தது. அதில், தன்னுடைய தந்தைக்கு கல்லீரல் சுருக்கம் எனப்படும் லிவர் சிரேசிஸ் பிரச்னை இருந்தது. 2017ம் ஆண்டு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. என்னுடைய கல்லீரல் அவருக்கு பொருந்தியதால் அறுவைசிகிச்சை செய்தோம்” என்று அவர் கூறினார்.
பூஜா பிஜார்னியா தன்னுடைய அப்பாவுக்கு உடல் உறுப்பு தானம் செய்தது உண்மைதான். ஆனால் அவர் சிறுநீரகத்தை தானம் செய்யவில்லை, தன்னுடைய கல்லீரலில் சிறு பகுதியை தானம் செய்துள்ளார்.
கல்லீரல் தானம் பற்றித் தேடினோம். அப்போது மற்ற உறுப்புகள் போல அல்லாமல் கல்லீரல் மீண்டும் வளரக் கூடிய உறுப்பு என்று தகவல் கிடைத்தது. கல்லீரலில் 50 சதவிகிதத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கல்லீரல் செயலிழப்பு தெரியவரும். கல்லீரலை உயிரோடு உள்ளவர்கள் தானமாக வழங்கலாம். தானம் வழங்கிய 2 – 3 மாதத்தில் தானமாக வழங்கப்பட்ட பகுதி மீண்டும் வளர்ந்துவிடும். தானம் வழங்கியவர் 2 – 3 வாரத்துக்குப் பிறகு மாத்திரை மருந்துகள் எடுப்பதை நிறுத்திவிடலாம். ஒரு மாதத்திலேயே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம் என்ற தகவல் கிடைத்தது. மேலும் பலரும் இப்படி கல்லீரல் தானம் செய்திருக்கும் செய்தியும் கிடைத்தது.
அசல் பதிவைக் காண: apollohospitals.com I Archive
பூஜா பிஜார்னியா தன்னுடைய தந்தைக்கு கல்லீரல் தானமாக வழங்கி மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. எதற்குத் தேவையின்றி சிறுநீரகம் தானமாக வழங்கினார் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. கல்லீரல் தானமாக வழங்கினார் என்று கூறுவதன் மூலம் கல்லீரலில் வரக்கூடிய பாதிப்புகள், தானமாக வழங்கினால் பாதிப்பு வராது என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். மாறாக, சிறுநீரக தானம் செய்தார் என்று முழு உண்மையை மறைத்து தகவல் பகிர்வது ஏற்புடையதல்ல…
முடிவு:
நமது வாசகர்கள், இதுபோல தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கிட்னியா கல்லீரலா… தந்தையின் உயிரை காப்பாற்றிய பெண் பற்றிய உண்மை விவரம்!
Fact Check By: Chendur PandianResult: Explainer
