தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி என்று புதிய தலைமுறையில் வெளியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டில், "ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி! புதுக்கோட்டை கருக்காகுறிச்சி வடதெரு, ராமநாதபுரம் ஆகிய இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! விரைவில் பணிகள் தொடங்க ஏற்பாடு!" என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த நியூஸ் கார்டை Palanisamy என்பவர் 2021 ஆகஸ்ட் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில், "கடந்த பத்து வருடங்களாக மீத்தேன் ஹைட்ரோகார்பன் விவசாயிகளுக்கு பாதிப்பு தரும் இந்த திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று கூப்பாடு போட்டு விட்டு இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் அம்னீஷியா வந்து விட்டதா வாக்குறுதி நிறைவேற்றாத வக்கற்ற அரசு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் விவஸ்தை இல்லா அரசு...." என்று குறிப்பிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதனால், தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. அரியலூரில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதிதாக இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கினார் என்று பரவும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். முதலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் உண்மை தன்மையை ஆய்வு செய்தோம். சன் நியூஸ் வெளியிடுவது போன்று அச்சு அசல் போலியான நியூஸ் கார்டு வெளியாவதை தடுக்க, பிரத்தியேகமான சூரியன் வாட்டர் மார்க்கை பயன்படுத்துவதாக சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜ் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் பார்க்கும் போது இந்த நியூஸ் கார்டில் பின்னணி டிசைன் இல்லை. எனவே, இது போலியானது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. இருப்பினும் இதை உறுதி செய்துகொள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியை தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது இது போலியானதுதான் என்பதை உறுதி செய்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்ததா என்று ஆய்வு செய்தோம். அப்போது புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதாக வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. இதற்கிடையே விகடனில் வெளியான கட்டுரை ஒன்றும் நமக்கு கிடைத்தது. அதில், தமிழக அரசு புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை என்று கூறிவிட்ட நிலையில், பழைய அனுமதி பெற்ற கிணறுகளை பயன்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தலா ஒரு இடத்தில் ஏற்கனவே பெற்ற அனுமதி அடிப்படையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த கிணறுகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பது வணிக ரீதியில் சாத்தியமில்லை என்று ஏற்கனவே கைவிடப்பட்டவை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive 1 I vikatan.com I Archive 2

அந்த செய்தியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர் சேதுராமன் என்பவரின் பேட்டியும் இடம் பெற்றிருந்தது. அவர், "காவிரி டெல்டா பகுதியானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் புதிதாக எண்ணெய் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி வட்டத்தில், நெடுவாசலுக்கு அருகே உள்ள வடத்தெரு பகுதியிலும், பவளப்பாறைகள் அதிகம் உள்ள மன்னார் வளைகுடா பகுதியிலும் (நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில்), ஏற்கெனவே கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி பெற்று சாத்தியமில்லா சூழலில் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கைவிடப்பட்ட பகுதிகளில், நிலம் மற்றும் நீர் வளத்திற்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நீரியல் விரிசல் உள்ளிட்ட முறைகளைக் கையாள அனுமதிக்கப்பட்ட புதிய முறையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை நாங்கள் கவலையோடு பார்க்கிறோம். உடனடியாக மேற்கண்ட பகுதிகளை ஏலத்திலிருந்து விலக்க வேண்டுமென மத்திய அரசைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, இதனை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து தேடிய போது புதுக்கோட்டையில வடதெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஏலம் விடக் கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய செய்தியும் கிடைத்தது. ஒன்றிய அரசு அனுமதி அளித்தாலும், தமிழக அரசு ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்காது என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியிருப்பது தெரிந்தது. இதன் மூலம் இந்த இரண்டு இடங்களிலும் மத்திய அரசு தான் தற்போது ஏலம் விட முயற்சி செய்து வருவது தெரிந்தது.

Archive

புதிய தலைமுறையில் வெளியான செய்தி குறித்து புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரா சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், "நியூஸ் டிக்கர் உண்மைதான். ஆனால், அதன் முன் பகுதி, பின்பகுதியை பார்த்தால் மட்டுமே முழுமையான விவரம் புரியவரும்.

திமுக எம்பி கனிமொழி கேள்விக்கு மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில், கடந்த ஜூன் 10ம் தேதி மூன்றாம் கட்ட இடத்தின் கீழ் நாடு முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஏலம் விடப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை புதுக்கோட்டையில் உள்ள வட தெரு மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் என இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த இடத்தில் PML எனப்படும் பெட்ரோலிய சுரங்க லைசன்ஸ் கடந்த 2007 மற்றும் 2012ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.

நிலத்தில் பெட்ரோலிய ஆய்வு மற்றும் பெட்ரோலிய எடுப்பதற்கான அனுமதி எண்ணை வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் 1948 மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விதிகள் 1959 படி மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது எந்த ஹைட்ரோகார்பன் பிரித்து எடுக்கும் பணியும் நடைபெறவில்லை என்று அமைச்சர் எழுத்துப்பூர்வமாக கூறியிருந்தார். இதைத்தான் டிக்கராக வெளியிட்டிருந்தோம். அதன் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, யார் அனுமதி வழங்கினார்கள் என்பதை மறைத்து தவறான அர்த்தம் வரும் வகையில் பகிர்ந்து வருகின்றனர்" என நம்மிடம் தெரிவித்தார்.

அசல் பதிவைக் காண: newindianexpress.com I Archive

இதன் அடிப்படையில் தேடியபோது, இந்தியன் எக்ஸ்பிரஸில் கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வமான பதில் தொடர்பான செய்தி கிடைத்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 2007 மற்றும் 2012ம் ஆண்டு வழங்கப்பட்ட பழைய அனுமதியை வைத்துக்கொண்டு புதிதாக ஏலம் விட மத்திய அரசு முயற்சி செய்து வருவது உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,

2021 மே மாதம் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு பழைய அனுமதியை வைத்துக்கொண்டு புதிதாக ஏலம் விட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

“ஒன்றிய அரசு அனுமதி வழங்கினாலும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், மத்திய அரசு வழங்கிய அனுமதியை மாநில அரசு வழங்கியது போன்று தவறான தகவல் பகிர்ந்து வருவது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கினார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

Fact Check By: Chendur Pandian

Result: False