6000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரம்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

உலக செய்திகள் சமூக ஊடகம் | Social

‘’6000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

பிரியா பாலாஜி என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ராட்சத மரம் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, தென்னாப்ரிக்காவில் உள்ள 6000 ஆண்டுகள் பழமையான மரம் எனக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேலே உள்ள புகைப்படம் பற்றி வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என ஃபேஸ்புக்கில் தகவல் தேடினோம். அப்போது நிறைய பேர் இதே புகைப்படத்தை பகிர்ந்து மிக பழமையான மரம், என்று கூறியிருந்ததை காண நேரிட்டது.

இவர்கள் கூறுவது போல உண்மையிலேயே, 6000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரங்கள் தென்னாப்ரிக்கா அல்லது வேறு ஆப்ரிக்க நாடுகளில் உள்ளதா என தகவல் தேடினோம். நீண்ட நேரம் இணையத்தில் தேடியபோது, பாவோ பாப் மரங்கள் அரிதிலும் அரிதாக, சுமார் 2000 ஆண்டுகள் வரை வாழக்கூடியது என தெரியவந்தது. குறிப்பாக, ஜிம்பாப்வே நாட்டில் 2011ம் ஆண்டில் ஒரு பாவோ பாப் மரம் உயிரிழந்துள்ளது. அந்த மரம், 2450 ஆண்டுகள் பழமையானதாகும். இதுதான் உலகிலேயே ஆவணப்படுத்தப்பட்ட மிக பழமையான ஆஞ்சியோஸ்பெர்ம் வகை மரமாகும்.

இதற்கடுத்தப்படியாக, தென்னாப்ரிக்கா, நமீபியா நாடுகளில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது. இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், பாவோ பாப் மரம் மிகக் குண்டாகவும், 150 முதல் 200 அடி உயரம் உள்ளதாகவும் கூட வளரும் என்று கூறப்படுகிறது. அவற்றின் வாழ்நாள் அதிகபட்சமாக, 3000 ஆண்டுகள் என கார்பன் பகுப்பாய்வு சோதனைகள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இதுபற்றி படிக்க இங்கே மற்றும் இங்கே கிளிக் செய்யவும்.

இம்மரங்கள் மடகாஸ்கர், செனகல், ஜிம்பாப்வே, தென்னாப்ரிக்கா, நமீபியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளிலும், ஆஸ்திரேலியா, இந்திய, இலங்கை போன்ற ஆசிய பசிபிக் நாடுகளிலும் காணப்படுகிறது.

இருந்தாலும், இவற்றின் வாழ்நாள் 6000 ஆண்டுகள் எனச் சொல்லவே முடியாது. அத்துடன், 6000 ஆண்டுகளாக பாவோ பாப் மரம் எதுவும் உயிர் வாழ்ந்து வருவதாக, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகிலேயே மிக அதிக நாள், அதாவது 4848 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்றை அமெரிக்காவில்தான் கண்டுபிடித்துள்ளனர். அது Britlestone pines வகை மரமாகும். இதனை 1957ம் ஆண்டில் கண்டுபிடித்து, ஆவணப்படுத்தியும் உள்ளனர். இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த மரம் பற்றி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரம் கார்பன் பகுப்பாய்வின் படி 4848 ஆண்டுகள் இருக்கலாம் எனக் கூறப்பட்டாலும், கின்னஸ் புத்தகத்தில், சுமார் 5200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 6000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகிறது. அதேசமயம், பாவோ பாப் மரங்கள் பலவும் 2000 ஆண்டுகள் கடந்தும் உயிர் வாழ்கின்றன. ஆனால், 6000 ஆண்டுகள் உயிர் வாழும் எந்த மரமும் இதுவரை பூமியில் கண்டறியப்படவில்லை. கின்னஸ் சாதனையே 5200 ஆண்டுகள்தான். அந்த மரம்கூட அமெரிக்காவில்தான் உள்ளது. பாவோ பாப் மரங்கள் தென்னாப்ரிக்கா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் காணப்பட்டாலும், அவற்றின் வாழ்நாள் சுமார் 3000 ஆண்டுகளுக்குள்தான்.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:6000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரம்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture