ஓட்டலில் தங்க இடம் தராததால் சாலையோரம் படுத்து உறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு?

உலக செய்திகள் சினிமா

‘’ஓட்டலில் தங்க இடம் தராததால் சாலையோரம் படுத்து உறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

கலைச்செல்வம் சண்முகம் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’நடிகர் அர்னால்டு, கலிஃபோர்னியா மாகாண ஆளுநராக இருந்தபோது ஒரு ஓட்டலை திறந்து வைத்தார். அந்த ஓட்டல் முகப்பில் அர்னால்டின் சிலை இருக்கும். அங்கு எப்போது வேண்டுமானாலும் அர்னால்டு வந்து தங்கிக் கொள்ளலாம் என்று ஓட்டல் அதிபர் உறுதி அளித்திருந்தார். ஆனால், ஆளுநர் பதவி போனபின், வெறும் ஆளாக அந்த ஓட்டலுக்குச் சென்ற அர்னால்டிற்கு, அவர்கள் அறை கொடுக்க மறுத்துவிட்டனர். பிறகு ஓட்டலுக்கு எதிரே சாலையில் படுத்து அர்னால்டு உறங்கினார். புகழ் இருக்கும் வரைதான் உலகில் மதிப்பு,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல, அர்னால்டு, ஓட்டலில் இடம் இன்றி சாலையோரம் படுத்து உறங்கவில்லை. மாறாக, அது சினிமா ஷூட்டிங் இடைவேளையில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இதனை அர்னால்டே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Instagram Link

ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் என்ற பகுதியில் சினிமா ஷூட்டிங் 2016ம் ஆண்டில் நடைபெற்றது. அதில், பங்கேற்பதற்காக வந்திருந்த அர்னால்டு, அங்குள்ள தனது சிலையின் முன்பே விளையாட்டாக படுத்து உறங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இதுவாகும். முதலில் 2012ம் ஆண்டு Franklin County Veterans Memorial பகுதியில் எடுத்த இந்த புகைப்படம், 2014ம் ஆண்டில், கொலம்பியாவிற்கு இடமாற்றப்பட்டது. அங்குதான், ஆண்டுதோறும் Arnold Sports Festival என்ற பெயரில் பாடி பில்டிங் போட்டி நடத்தப்படுகிறது. அதன் அருகில் படுத்து உறங்குவது போல அர்னால்டு எடுத்ததுதான் இந்த புகைப்படமாகும்.

காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது, என்ற தலைப்பில் அர்னால்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அப்படியே எடுத்து, ஆளாளுக்கு ஒரு கதையை சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பி வருவது, சந்தேகமின்றி தெளிவாகிறது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஓட்டலில் தங்க இடம் தராததால் சாலையோரம் படுத்து உறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •