
பைக் ரேஸ் பந்தயத்தில் கீழே விழுந்த வீரர் மீண்டும் எழுந்து வந்து வேறு ஒரு பைக்கில் சென்று வெற்றி பெற்றதாக வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தன்னம்பிக்கை வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில் பைக் ரேசர் டிராக்கில் கீழே விழுகிறார். பின்னர், அவர் தொடங்கிய இடத்துக்கு ஓடி வந்து வேறு ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு சென்று வெற்றி பெறுவது போன்று உள்ளது. தமிழ் பாடல் ஒன்றும் பின்னணியில் ஒலிக்கிறது.
நிலைத் தகவலில், “உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கும் பொழுது இந்த காணொளியைப் பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தமிழகரம் இணைய வானொலி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூலை 31ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்க்கும் போது பைக் ரேசில் ஈடுபட்ட நபர் விபத்தில் சிக்கிய பிறகு, ஓடி வந்து வேறு ஒரு பைக் எடுத்துக் கொண்டு சென்று போட்டியில் பங்கேற்றது போலவும், பலரும் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றது போலவும் காட்டப்பட்டுள்ளது. தோல்வி வந்தாலும் துவண்டு விடாமல் வெற்றி பெற இந்த வீடியோ உத்வேகம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ உண்மையில் ஒரே நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டதா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். பைக் ஓட்டும் நபரின் வண்டியில் 93 என்று உள்ளது. இது எங்கே, எப்போது நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. எனவே, பிரபல மோட்டார் சைக்கிள் ரேஸ்ஸில் 93 என்ற எண்ணுக்கு உரியவர் யார் என்று தேடினோம்.
அப்போது அது பிரபல மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மார்க் மார்க்வெல் ஆலெண்டா (Marc Márquez Alentà) என்று தெரிந்தது. தொடர்ந்து தேடிய போது இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் நமக்குத் தெரியவந்தது. பந்தயத்தின் போது பைக்கில் இருந்து தவறி விழும் நிகழ்வு 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
சுவர் எகிறிக் குதித்து ஓடி வந்து மோட்டார் சைக்கிள் எடுத்துச் செல்லும் நிகழ்வு 2015ம் ஆண்டு நடந்ததாக யூடியூப் வீடியோ கிடைத்தது. அந்த வீடியோவில் அவர் வரும் பைக் கோளாறு காரணமாக நின்றுவிடுகிறது. உடனே, சுவர் எகிறிக் குதித்து பந்தயம் நடக்கும் இடத்துக்கு ஓடி வரும் மார்க், வேறு ஒரு பைக்கை எடுத்துச் செல்லும் காட்சி தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
மார்க் வெற்றிக் கோட்டை நெருங்கியதும் பைக் மீது நின்றபடி ஸ்டைல் செய்யும் காட்சி 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று மற்றொரு வீடியோவில் நமக்குத் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பிரபல பைக் பந்தய வீரரின் பல வீடியோக்களை தொகுத்து ஒரே நிகழ்வின் போது எடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிவின் எந்த இடத்திலும் இது ஒரே வீடியோ என்றோ, பல வீடியோக்களின் தொகுப்பு என்றோ எதையும் குறிப்பிடவில்லை. பைக்கில் இருந்து கீழே விழுந்து, ஓடி வந்து வேறு பைக் எடுத்துச் சென்று வெற்றி பெற்றது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இதன் அடிப்படையில் போதுமான தகவல் இன்றி தவறான புரிதல் ஏற்படுத்தும் நோக்கில் வீடியோ பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வீடியோ எடிட் செய்யப்பட்டது, தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பைக் ரேஸில் கீழே விழுந்தவர் மீண்டும் வேறு ஒரு பைக்கில் சென்று ஜெயித்ததாக பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Altered
