
சமீபத்தில் அபுதாபி சென்ற பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் காவி உடை அணிந்து வரவேற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் உடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அபுதாபி பட்டத்து இளவரசர் இந்து சாமியார்கள் அணியக்கூடிய காவி உடையை அணிந்திருக்கிறார்.
நிலைத் தகவலில்,” காவி உடையுடன் பிரதமர் மோடியை வரவேற்ற அரபு மன்னர்… #நமச்சிவாய…” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, இந்து என்ற ஃபேஸ்புக் ஐ.டி கொண்ட நபர் 2019 ஆகஸ்ட் 29ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி சமீபத்தில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அபுதாபியில் அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் சயீத் விருது வழங்கப்பட்டது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் இந்த விருதை வழங்கினார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபுதாபி சென்ற பிரதமர் அரபி உடையில் இருந்ததாக ஒரு தரப்பினர் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அதை ஆய்வு செய்தபோது அது போலியான மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரிந்தது. அது பற்றி செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தற்போது அதற்கு பதிலடி கொடுப்பது போல, அபுதாபி பட்டத்து இளவரசர் காவி உடையில் இருப்பது போன்ற படத்தை எதிர் தரப்பினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த படம் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அப்போது, பிரதமர் மோடி, அபுதாபி பட்டத்து இளவரசர் ஆகியோர் இருக்கும் படம் நமக்குக் கிடைத்தது. பட்டத்து இளவரசர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலிருந்தே அந்த படத்தை நாம் எடுத்தோம். அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று காவி உடையுடன் அவர் இல்லை.
பிரதமர் அபுதாபி பயணம் தொடர்பாக வீடியோ ஏதும் உள்ளதா என்று தேடினோம். அப்போது பிரதமர் மோடிக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது, அவருக்கு விருது வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ கிடைத்தது. அதை ஆய்வு செய்தோம். அதில், அபுதாபி பட்டத்து இளவரசர் காவி உடையில் இல்லை.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு புகைப்படத்தையும் அபுதாபி பட்டத்து இளவரசர் வெளியிட்ட படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில், அபுதாபி பட்டத்து இளவரசருக்கு மட்டுமில்லாமல், அவர் பின்னால் இருக்கும் புகைப்படத்துக்கும் சேர்த்து காவி நிறத்தை பூசியிருப்பது தெரிந்தது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அபுதாபி பட்டத்து இளவரசர் காவி உடையில் இருப்பது போன்று வெளியிடப்பட்ட மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காவி உடையில் மோடியை வரவேற்ற அபுதாபி பட்டத்து இளவரசர்- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
