
தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க விமானங்கள் மூலம் 8000 கோடி லிட்டர் தண்ணீர் அனுக்க கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் கீழ், “தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தைக் கேள்விப்பட்டு கண்ணீர் வடித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு 8000 கோடி லிட்டர் தண்ணீர் அனுப்ப உத்தரவு. நன்றி அய்யா!” என்று உள்ளது.
இந்த பதிவை Troll Imran Sons என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூன் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தமிழக அரசு தண்ணீர் பற்றாக்குறை மட்டுமே உள்ளது. அதை சமாளித்துவிடுவோம் என்று கூறிவருகிறது. இருப்பினும் பல உணவகங்கள் மூடும் அளவுக்கு தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ரயில் மூலம் தண்ணீர் அனுப்பத் தயார் என்று கேரள அரசு தெரிவித்திருந்தது. இதற்கு, தமிழக அரசு நன்றி தெரிவித்தது. அதே நேரத்தில், தண்ணீரைப் பெற்றுக்கொள்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் அறிவித்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த சூழ்நிலையில்தான், தமிழகத்துக்கு 8000 கோடி லிட்டர் தண்ணீரை கனடா பிரதமர் ஜஸ்டின் வழங்க முன்வந்துள்ளதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மரியாதை உண்டு. கனடாவின் 150வது சுதந்திர தினத்தையொட்டி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கனடா தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தமிழ் கலாச்சாரப்படி பொங்கல் பண்டிகையையும் ஜஸ்டின் கொண்டாடி வருகிறார்.
இதனால், எதற்கெடுத்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ பெயரால் தமிழ்நாட்டில் வதந்திகள் பரவுவது அதிகரித்துவிட்டது. அந்த வகையில்தான் விமானம் மூலம் தண்ணீர் வழங்க அவர் முன்வந்ததாக கூறப்படும் இந்த பதிவும் உள்ளது. இதனால், அவர் செய்யும் நல்ல விஷயம் கூட உண்மைதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது.
தமிழகம், இந்தியா தொடர்பாக சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து ஏதேனும் தெரிவித்துள்ளாரா என்று அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பார்த்தோம். ஆனால், அப்படி எதுவும் அவர் தெரிவிக்கவில்லை.
“கிழிந்த காலணியுடன் ஓடிய கோமதி மாரிமுத்துவுக்கு ஒரு டஜன் ஷூ அனுப்ப உத்தரவு”, “காலா படத்துக்கு கனடாவில் தடை”, “கஜா புயல் பாதிப்புக்கு நிதி உதவி”, “சர்க்கார் படத்துக்கு ஆதரவு – தேவைப்பட்டால் திரையரங்குகள் பாதுகாப்புக்கு கனடா படையை அனுப்புவேன்” என்று தொடர்ந்து இவர் பெயரால் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விமானம் மூலம் 8000 கோடி தண்ணீர் அனுப்ப உத்தரவு என்ற இந்த பதிவும் ஒன்று என்று தெரிந்தது.
இந்த பதிவை வெளியிட்ட பக்கத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம்” இந்திய நாட்டுக்கு எதிராக யார் பேசினாலும் அவரது உண்மை முகத்தை இங்கே கிழித்துத் தொங்க விடுவோம். நாம் அனைவரும் தமிழனாக பிறந்த இந்தியர்கள். பிரிவினை பேசும் எவராக இருந்தாலும் அவர் எனக்கு எதிரியே” என்று இருந்தது. இதன் மூலம், ட்ரோல் என்று பெயர் வைத்தாலும் மிகவும் விவரமாக இருப்பது புரிந்தது.

இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்திருந்தனர். சிலர் இதை கிண்டல் என்று புரிந்து கமெண்ட் செய்திருந்தனர். சிலர், தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகளை கமெண்ட் செய்திருந்தனர். ஒருவர், “இவரைக் கும்பிட வேண்டாம், கோவில்கட்டியே தீர வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். இதன் மூலம், இந்த தகவலை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில், கனடா பிரதமர் பெயரால் பரவும் போலியான செய்தி இது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிண்டல் செய்ய ஆயிரம் விஷயங்கள் உள்ளன… எதற்கெடுத்தாலும் கனடா பிரதமர்தான் கிடைத்தாரா… இவர்களின் இத்தகையை போலியான செய்தி உருவாக்கம் மற்றும் பகிர்வு, தமிழ், தமிழருக்கு ஆதரவுக்கரம் நீட்டும் பிற நாட்டுத் தலைவர்கள், மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. தலைவர்கள் பெயரில் இதுபோன்று பொய்யான செய்திகளை உருவாக்காமல் இருப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்!
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்பும் கனடா பிரதமர்– பேஸ்புக் வதந்தி!
Fact Check By: Praveen KumarResult: False
