
‘’தன் நாட்டு மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும்படி சீன பிரதமர் மசூதி சென்று தொழுதார்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரலாக பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
Mohamed Lukman என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், அரசாங்க அதிகாரி போல தோன்றும் ஒருவர் தனது உதவியாளர்களுடன் மசூதியில் உள்ளே நுழைந்து தொழுகை நடத்தும் காட்சிகளை காண முடிகிறது. ஆனால், அவர் சீன பிரதமர், கொரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாக்கும்படி அல்லாவை வேண்டுகிறார், என, மேற்கண்ட பதிவில் கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டோம். அவரை எந்த வகையில் பார்த்தாலும் சந்தேகமாகவே இருந்தது. அத்துடன், அந்த பதிவின் கமெண்ட்களை படித்து பார்த்தபோது, ஒரு சிலர் அவரை மலேசியாவின் முன்னாள் பிரதமர் எனக் குறிப்பிட்டதை காண முடிந்தது.

இதன்பேரில், கூகுளில் தகவல் ஆதாரம் தேடினோம். அப்போது, மலேசியாவின் பிரதமர் பதவி வகித்த அப்துல்லா அகமது படாவி பற்றிய விவரங்கள் கிடைத்தன. அவர் தொடர்பான வீடியோவை எடுத்துத்தான் சீன பிரதமர் என்று கூறி தவறான தகவலை பரப்பியுள்ளனர்.

நாம் ஆய்வு செய்யும் பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோ உண்மையில் கடந்த 2015ம் ஆண்டு ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டதாகும். அதன் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
இதுதவிர, சீனாவின் பிரதமர் லீ கெகியாங் ஆவார். இதேபோல, சீன அதிபராக ஜீ ஜின்பிங் உள்ளார். பார்க்க சீனர் போல தோன்றுவதால் உடனே மலேசிய முன்னாள் பிரதமரை சீன பிரதமர் எனக் கூறி தவறான வதந்தி பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும்படி மசூதி சென்று தொழுதாரா சீன பிரதமர்?
Fact Check By: Pankaj IyerResult: False
