ஓட்டுக்குப் பணம் கொடுத்தாரா எடப்பாடி பழனிசாமி? – உண்மை அறிவோம்!

அரசியல் சமூக ஊடகம்

சேலத்தில் பெண்மணி ஒருவருக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

முதல்வரே ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்..! வாழ்க ஜனநாயகம்…! வாழ்க தேர்தல் ஆணையம்..!

Archived link

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழம் விற்பனை செய்யும் பெண்மணி ஒருவருக்கு பணம் கொடுக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்னால் இருந்து ஒருவர் பணம் மடித்துக் கொடுக்கிறார், அதை வாங்கி ரகசியமாக கொடுப்பது போல, அந்த பழக்கார பெண்மணிக்கு அளிக்கிறார். இதைப் பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமி பணம் கொடுப்பது போலவே உள்ளது. அருகில் நின்றுகொண்டிருக்கும் வேட்பாளரும் பணம் கொடுப்பதை உன்னிப்பாகக் கவனிப்பது தெரிகிறது.

“முதல்வரே ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார். வாழ்க ஜனநாயகம், வாழ்க தேர்தல் ஆணையம்” என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்க்கும்போது, உண்மை போலவே தெரிகிறது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போலவும் சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால், தி.மு.க-வினர் அதிக அளவில் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், வேலூர் தவிர, எஞ்சிய 38 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதையொட்டி ஏப்ரல் 16ம் தேதி மாலை தேர்தல் பிரசாரம் முடிவுற்றது. 16ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பழ வியாபாரம் செய்யும் பெண்மணி ஒருவரிடம், அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். முதல்வரைப் பார்த்த மகிழ்ச்சியில் அந்த பெண்மணி, கடையில் இருந்த வாழைப் பழத்தைக் கொடுத்துள்ளார். முதலில் எடப்பாடி பழனிசாமி அதை வாங்க மறுத்தார். பின்னர், பழத்தை வாங்கி தன்னுடைய உதவியாளரிடம் கொடுத்தார்.

உதவியாளர் பணம் எடுப்பதற்குள், அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கும்படி துண்டுப் பிரசுரத்தை, அந்த பெண்ணிடம் முதல்வர் வழங்கினார். உதவியாளர் பழத்திற்கு உரிய பணம் கொடுத்ததும் அதை வாங்கி, அந்த பெண்மணியிடம் கொடுத்துவிட்டு வாக்கு சேகரிக்க புறப்பட்டார்.

இது தொடர்பான முழுமையான வீடியோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…

Archived link

உண்மை இப்படி இருக்க, வீடியோவில் பணம் கொடுக்கும் காட்சியை மட்டும் கட் செய்து சமூக ஊடகங்களில், முதல்வர் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறி பரவவிட்டுள்ளனர். தேர்தல் நேரம் என்பதாலும், பல கட்சிகளும் பணம் கொடுப்பதாக தொடர்ந்து செய்திகள் வருவதாலும், என்ன நடந்தது என்று முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாத மக்கள், எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்தது உண்மைதான் என்று நம்பி பகிர்ந்துள்ளனர்.

பிரபல பத்திரிகைகள் கூட இது உண்மையா என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியிருந்தன. நக்கீரனில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்த வீடியோ சர்ச்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், “வாக்குக்கு பணம் அளிக்கவில்லை, பழத்துக்குத்தான் பணம் அளித்தேன். எந்த பொருளை வாங்கினாலும் அதற்கு விலையாக பணம் கொடுப்பது எனது வழக்கம். மற்றவர்களைப் போல ஓசியில் வாங்கும் பழக்கம் எனக்கு இல்லை. நான் வாழைப்பழம் வாங்கியதை எடிட் செய்து அகற்றிவிட்டு, பணம் கொடுத்ததை மட்டும் ஒளிபரப்பியுள்ளனர்” என்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் தொடர்பான வீடியோ…

Archived link

இதுதொடர்பாக சேலம் ஆட்சியரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “முதலமைச்சர் பணம் கொடுத்தது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் இது பற்றி தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாக்குக்கு பணம் அளிக்கவில்லை. வாங்கிய பழத்துக்கே, பணம் அளித்துள்ளார். அதுவும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றி கூறப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.  எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:ஓட்டுக்குப் பணம் கொடுத்தாரா எடப்பாடி பழனிசாமி? – உண்மை அறிவோம்!

Fact Check By: Praveen Kumar 

Result: False