
‘’உத்தரகாண்ட் மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மண்ணின் மைந்தன் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே மற்றொருவர் பகிர்ந்த பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து பகிரப்பட்டதாகும். இதில், ‘’உத்திர காண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 42ல் 35 இடங்களில் காங்கிரஸ் வெற்றி. Note: வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஸ்கிரின்ஷாட்டின் மூலத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தோம். இதன்படி, ஃபேஸ்புக் சென்று இந்த தகவலை பதிவிட்டு தேடினோம். ஆனால், நிறைய பேர் இதே தகவலை உண்மை போல பதிவிட்டிருந்த விவரம் கிடைத்தது. இது நமக்கு மேலும் குழப்பத்தையே அதிகரித்தது.

இதையடுத்து, ஊடகங்களில் ஏதேனும் இப்படி செய்தி வெளியாகியுள்ளதா என விவரம் தேடினோம். ஆனால், கிடைத்த தகவலோ மிக அதிர்ச்சியாக இருந்தது. ஆம். அப்படி எதுவும் சமீபத்தில் நடைபெறவில்லை எனவும், கடைசியாக 2018ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதாகவும் விவரம் தெரியவந்தது.

இதுதவிர, அம்மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது வழக்கம் என்றும், இதில் 2013க்குப் பின்னர் 2018ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது என்றும் தெரியவந்தது.

அதாவது, 2018ல் எஞ்சியிருந்த சில பகுதிகளுக்கு மட்டும் சமீபத்தில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்து, ஜூலை 10, 2019 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாக, தகவல் கிடைத்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது, நாம் சந்தேகப்படும் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, 2019ல் பெரிய அளவில் உள்ளாட்சித் தேர்தல் எதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவில்லை என உறுதியாகிறது. 2018ம் ஆண்டு சில உள்ளாட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாமல் போன நிலையில், அந்த 26 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது. இதில், காங்கிரஸ் 4 வார்டுகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 22 தொகுதிகளில், பாஜக 7, சுயேச்சைகள் 15 இடங்களில் வென்றுள்ளனர்.
இதுதவிர, உத்தரப் பிரதேச மாநிலம் 2003ல்தான் உருவாக்கப்பட்டது. இங்கு, பாஜக தற்போது ஆளுங்கட்சியாக உள்ளது. கடந்த 2018ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில்கூட பாஜக.,வே அதிக இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. இதுபற்றி இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் என்றாலே அது வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படுவதுதான் இந்தியாவில் வழக்கம். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களுக்கே வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
உண்மை இப்படியிருக்க, இவர்களாகவே, நடைபெறாத ஒரு சம்பவத்தை நடந்தது போல சித்தரித்து, தவறான தகவலை திட்டமிட்டே பரப்பியுள்ளனர் என்பது சந்தேகமின்ற உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி: ஃபேஸ்புக் வதந்தியால் குழப்பம்
Fact Check By: Pankaj IyerResult: False
