சீமானுக்கு பதிலடி கொடுத்த ஜெகன் மோகன்?- ஃபேஸ்புக் நியூஸ் கார்டு உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் யார் என்றே தெரியாது என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்தார்”- என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

SEEMAN 2.png
Facebook LinkArchived Link

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ஜெகன் மோகன் ரெட்டி சீமானுக்கு பதிலடி! என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “சீமான் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர் எழுதிய புத்தகத்தை நான் படிப்பதாக சொல்கிறார்கள். அவர் புத்தகம் எழுதினார் என்று நம்புவதே எவ்வளவு பெரிய பிழை. தம்பிகள் நம்பலாம், தமிழர்கள் நம்பலாமா?” என்று உள்ளது.

இந்த பதிவை, Rajesh Dravidan என்பவர் 2019 அக்டோர் 9ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்னுடைய திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்தி வருகிறார். என்னுடைய புத்தகத்தை வைத்திருப்பார் போல” என்று கூறினார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பல விதங்களில் பரவி வருகின்றன.

Youtube LinkArchived Link 1
hindutamil.inArchived Link 2

திருப்பி அடிப்பேன் என்ற சீமானின் புத்தகத்தை ஜெகன் மோகன் ரெட்டி படிப்பது போல ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அது போட்டோஷாப் மார்ஃபிங் செய்யப்பட்டது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது சீமான் யார் என்றே தெரியாது என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக பிரபல செய்தி ஊடகம் ஒன்றின் நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது மிகவும் தெளிவாக தெரிகிறது. ஜெகன் மோகன் ரெட்டி சீமானுக்கு பதிலடி என்று எழுதப்பட்டுள்ள இடத்தின் பின்னணி வண்ணமடிக்கப்பட்டு அதன் மீது எழுதப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், ஜெகன் மோகன் ரெட்டியின் புகைப்படம் கூட சரியாக வைக்கப்படவில்லை. பிக் நியூஸ்க்கு மேல் வேறு ஒரு படம் துண்டாகத் தெரிகிறது.

அக்டோபர் 7 ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், என்னுடைய புத்தகத்தை ஜெகன் படித்திருப்பார் போல என்று சீமான் கூறியது தொடர்பான நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. அந்த நியூஸ் கார்டை எடிட் செய்து போலியாக இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டது தெரிந்தது.

சீமான் தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி ஏதாவது கூறியுள்ளாரா, அதன் அடிப்படையில் தொலைக்காட்சி ஊடகத்தின் நியூஸ் கார்டை பயன்படுத்தி இவர்கள் பதிவிட்டுள்ளார்களா என்று தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

SEEMAN 4.png
Search Link

நியூஸ் கார்டில் சீமான் யார் என்றே தெரியாது என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறினார் என்று உள்ளது. அதற்கு அடுத்த வரியில் “அவர் புத்தகம் எழுதினார் என்று நம்புவது எவ்வளவு பெரிய பிழை” என்று ஜெகன் மோகன் கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். சீமானைப் பற்றித் தெரியாதவர் எப்படி சீமான் புத்தகம் எழுதினார் என்று கூறுவது பிழை என்று சொல்வார். மேலும், தன்னுடைய தொண்டர்களை தம்பிகள் என்று அழைப்பதை எப்படி அவர் தெரிந்துகொண்டார்… இப்படி முன்னுக்குப் பின் முரணான வகையில் அந்த பதிவு இருந்தது. இதன் மூலம் இந்த பதிவு வேண்டுமேன்றே வதந்தியை பரப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கியிருப்பது தெரிந்தது. கிண்டலுக்காக இந்த பதிவு உருவாக்கப்பட்டது போலவும் இல்லை. 

இந்த நியூஸ் கார்டை வெளியிட்டவரின் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னுடைய ப்ரொஃபைல் படமாக தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை வைத்திருந்தார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தொடர்பான பதிவுகளை இவர் வெளியிட்டு வருவது தெரிந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றி அவதூறான பதிவுகள் பல இருந்தன.

SEEMAN 5.png
Facebook LinkArchived Link

இதன் மூலம் சீமானைப் பற்றி அவதூறு பரப்பும் நோக்கி திட்டமிட்டு இந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், இந்த பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சீமானுக்கு பதிலடி கொடுத்த ஜெகன் மோகன்?- ஃபேஸ்புக் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •