
கூடங்குளம் அணுஉலை, சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலை, கெய்ல் எண்ணெய் குழாய் ஆகிய திட்டங்களுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினராக உள்ள வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

வழக்கறிஞர் வில்சன் புகைப்படத்துடன் ஒரு தகவல் டைப் செய்யப்பட்டுள்ளது. அதில், “பிரபல அணுஉலை ஆதரவு வழக்கறிஞர் வில்சன் திமுக மேலவை உறுப்பினராக போட்டியிடுகிறார்.
மேலும் அன்னார் கெயில் எண்ணைக்குழாய் வழக்கில் எண்ணை நிறுவனத்தின் சார்பாகவும், எட்டுவழிச் சாலை வழக்கில் நெடுஞ்சாலைத் துறைக்கு ஆதரவாகவும், மக்கள் போராட்டங்களுக்கு எதிராகவும் வாதாடியவர்.
தி.மு.க வெளியில் மக்கள் விரோத விஷயங்களாகப் பேசும் அத்தனைக்கும் மிகப்பெரிய லாபியிஸ்ட் வில்சன். அவர்தான் தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை DMK Fails என்ப ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 4ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இது போன்ற பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வழக்கறிஞர் வில்சன் தற்போது குட்கா முறைகேடு, கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட வழக்குகளில் தி.மு.க ஆதரவாக ஆஜரானார். தற்போது தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு வில்சன், தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் (ஏஏஜி) ஆக 2008 ஆகஸ்ட் முதல் 2011 மே வரை இருந்துள்ளார். அதன்பிறகு மத்திய அரசின், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியாவாக 2012 ஆகஸ்ட் முதல் 2014 மே வரை பதவி வகித்துள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இவர் மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றியதும் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் பதவியை ராஜினாமா செய்துவிட்டதும் உறுதியானது.
இவர் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக வாதாடினாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது அணு மின்நிலையத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு சார்பில் வில்சன் வாதாடியது நமக்குத் தெரிந்தது. 2013 ஜூலை 23ம் தேதி வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில், “போராட்டக்காரர்களால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்களை பணியை செய்ய விடாமல் இவர்கள் தடுக்கிறார்கள்” என்று மிகக் கடுமையான வாதத்தை வில்சன் முன்வைத்தது தெரிந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கெயில் எண்ணெய் குழாய் பதிப்பு தொடர்பான வழக்கில் வில்சன் ஆஜராகி உள்ளாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது இந்த வழக்கில் வில்சன் ஆஜரானது உண்மைதான் என்பதை உறுதி செய்யும் செய்திகள் நமக்குக் கிடைத்தன. அந்த செய்திகளைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
மூன்றாவதாக, சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில் வில்சன் ஆஜரானார் என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோ ஏற்கனவே உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியது. அதில், இந்த வழக்கில் வில்சன் ஆஜராகவே இல்லை. அவர் 2014ம் ஆண்டே தன்னுடைய மத்திய அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்று ஆதாரத்துடன் நிரூபித்திருந்தோம். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக வில்சன் ஆஜரானதாக பா.ம.க-வின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தி.மு.க வெளியிட்ட அறிக்கையையும் அளித்திருந்தோம். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கூடங்குளம், கெய்ல் உள்ளிட்ட விஷயங்களில் மக்களின் உணர்வுக்கு எதிராக வில்சன் வழக்கு தொடர்ந்து அல்லது தி.மு.க சார்பில் வழக்கு தொடர்ந்து வாதாடியதாக எந்த செய்தியும் இல்லை. நமக்குக் கிடைத்த எல்லா செய்திகளிலும் மத்திய அரசு வழக்கறிஞராக வில்சன் வாதாடினார் என்றே குறிப்பிட்டுள்ளன. 2014ல் மத்திய அரசு வழக்கறிஞர் பணியை ராஜினாமா செய்த பிறகு தி.மு.க தொடரும் வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார்.

மத்திய அரசு பதவியை ராஜினாமா செய்த பிறகு, குட்கா, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற வழக்கு மட்டுமின்றி, தமிழக உள்ளாட்சித் தேர்தல், டி.என்.பி.எஸ்.சி 11 உறுப்பினர்கள் நியமனம் ரத்து, ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் உள்ளிட்ட வழக்குகளில் தி.மு.க சார்பில் வாதாடி வருகிறார். அதுமட்டுமல்ல, டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் உள்ளிட்ட பல வழக்குகளிலும் இவர் ஆஜராகி வந்துள்ளார்.
நம்முடைய ஆய்வில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக வில்சன் ஆஜரானது உறுதியாகி உள்ளது.
கெயில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞராக வில்சன் ஆஜரானது உறுதியாகி உள்ளது.
2014ம் ஆண்டு மத்திய அரசு வழக்கறிஞர் பணியை ராஜினாமா செய்த பிறகு, தி.மு.க தொடரும் வழக்குகளில் அவர் ஆஜராகி வருவது உறுதியாகி உள்ளது.
சென்னை – சேலம் எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக அவர் ஆஜராகவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் பொய்யும் கலந்து வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பாதி உண்மை, பாதி தவறான தகவல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அணுஉலை, எட்டு வழிச் சாலை, கெய்ல் திட்டத்திற்கு ஆதரவாக வாதாடிய வில்சன்! – ஃபேஸ்புக் குற்றச்சாட்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Mixture
